Latest Updates

வேதியியலின் வரலாறு (History of chemistry)


வேதியியலின் வரலாறு (History of chemistry) என்பது பண்டைய வரலாற்றில் தொடங்கி நிகழ்காலம் வரையிலான காலப்பகுதியைப் பிரதிபலிக்கிறது. கி.பி 1000 ஆண்டுகளில் வாழ்ந்த குடிமக்கள் பயன்படுத்திய பல்வேறு விதமான தொழில்நுட்பங்கள் முடிவில் வேதியியலின் பலவகைப் 
பிரிவுகளாக உருவாகியுள்ளன. தாதுக்களில் இருந்து உலோகங்களைப் பிரித்தெடுத்தல், மட்பாண்டங்கள் செய்தல் மற்றும் மெருகூட்டுதல், மதுவகைகளை நொதிக்கச் செய்தல், மருந்துக்காகவும் நறுமணத்திற்காகவும் தாவரங்களிலிருந்து வேதிப்பொருட்களைப் பிரித்தெடுத்தல், கொழுப்பை சோப்பாக மாற்றுதல் மற்றும் வெண்கலம் போன்ற உலோகக் கலவைகள் செய்தல் போன்ற செயல்களை உதாரணமாகக் கூறலாம்.

வேதியியலின் முற்காலக் கொள்கையான இரசவாதம் என்ற கொள்கை பருப்பொருளின் இயற்கையையும் அதன் மாற்றங்களையும் விளக்குவதில் வெற்றி பெறவில்லை. எனினும் அவர்கள் மேற்கொண்ட சோதனைகள் மற்றும் பதிவு செய்த அச்சோதனைகளின் முடிவுகள் முதலியனவற்றிலிருந்து இரசவாதிகள் நவீன வேதியியலுக்கான புதிய தளம் அமைத்தனர். இரசவாதம் மற்றும் வேதியியல் ஆகிய பிரிவுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை 1661 ஆம் ஆண்டு இராபர்ட் பாயில் தன்னுடைய நூலில் தெளிவுபடுத்தினார். அதன்பின்னர் இவ்விரண்டிற்கும் இடையேயான முரண்பாடுகள் வெளிப்படத் தொடங்கின.

ஆற்றல் அழிவின்மை விதியை வெளியிட்ட அண்டோயின் இலவாய்சியரின் சோதனைகளுக்குப் பின்னர் வேதியியல் என்பது கவனமான அளவீடுகள் மற்றும் வேதியியல் நிகழ்வுகளின் அடிப்படையிலான அளவீடுகள் ஆகியவற்றால் நிறுவப்பட்ட ஒரு அறிவியல் பிரிவு என்ற நோக்கத்துடன் பயணித்தது. வேதியியலின் வரலாறு வெப்ப இயங்கியலின் வரலாற்றுடன், குறிப்பாக விலார்டு கிப்சின் ஆய்வுகளுடன் பிணைந்தே காணப்படுகிறது.


தொடக்கக்கால உலோகவியல்

ஆரம்ப காலத்தில் மனிதர்களால் பயன்படுத்தப்பட்ட உலோகமாக பதிவு செய்யப்பட்டிருப்பது தங்கம் எனத் தெரிகிறது. அப்போது இத்தங்கத்தை இயற்கையில் தனித்து காணமுடிந்துள்ளது. பழைய கற்காலமான கி.மு 40000 ஆண்டுகளில் எசுப்பானிய குகைகளில் சிறிதளவு இயற்கைத் தங்கம் காணப்பட்டுள்ளது.

வெள்ளி, செப்பு, வெள்ளீயம் மற்றும் விண்கல் இரும்பு முதலிய உலோகங்களும் இயற்கையில் கிடைத்துள்ளன. இவ்வுலோகங்களைக் கொண்டு சிறிய அளவில் உலோக வேலைப்பாடுகள் நடைபெற்றுள்ளன. கி.மு 3000 ஆண்டுகளில் விண்கல் இரும்பிலிருந்து தயாரிக்கப்பட்ட எகிப்திய ஆயுதங்கள் "வானத்திலிருந்து வந்த குத்துவாள்கள்" எனப் போற்றப்பட்டன.

ஒரு விவாதத்திற்கு எடுத்துக் கொண்டால், கட்டுப்பாட்டு முறையில் பயன்படுத்தப்பட்ட முதல் இரசாயன வினை தீ என்று கூறலாம். எனினும், பல நூற்றாண்டுகளுக்கும் தீ வெறுமனே ஒரு மாயச் சக்தி என்றே பர்க்கப்பட்டது. ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாற்றும் ஒரு மாயச் சக்தி (எரியும் மரம் அல்லது கொதிக்கும் நீர்) வெப்பம் மற்றும் ஒளியை உற்பத்தி செய்வதாகக் கருதப்பட்டது. பண்டைய சமூகத்தை பல வகையிலும் தீ பாதித்துள்ளது. அன்றாட வாழ்வின் சமையல் மற்றும் வாழ்விடத்தை ஒளியூட்டுதல் போன்ற எளிய அம்சங்கள் தொடங்கி செங்கல், மண்பாண்டம் மற்றும் கருவிகள் செய்வதற்காக உலோகங்களை உருக்குதல் போன்ற முன்னேறிய தொழில்நுட்ப அம்சங்கள் வரை இவ்வீச்சு இருந்தது.

ஆரம்ப கட்டங்களின் போது கண்ணாடி கண்டுபிடிப்பு மற்றும் உலோகங்களைத் தூய்மைப் படுத்துதல் போன்றவை படிப்படியாக வளர்ச்சி பெற்றிருக்கலாம்.எகிப்தியர்கள் உலோகங்களைத் தூய்மைப்படுத்தத் தொடங்கிய கி.மு.2900 ஆம் ஆண்டுகளிலேயே தங்கம் ஒரு விலைமதிப்பு மிக்க உலோகமாக மாறியது.


வெண்கலக் காலம்

சில உலோகங்களை அவற்றின் தாதுக்களில் இருந்து பிரித்தெடுப்பதற்கு எளிமையாக சூடுபடுத்தினாலேயே பெறமுடியும். உதாரணம் ஈயம் மற்றும் வெள்ளீயம். உயர் வெப்பநிலையில் உருக்கிப் பிர்த்தல் என்னும் முறையில் தாமிரம் பிரித்தெடுக்கப்படுகிறது. இப்பிரித்தெடுக்கும் தொழில்நுட்பம் கி.மு 5 மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. செர்பியாவில் உள்ள மச்தான்பெக், யார்மோவாக் மற்றும் பிலோக்னிக் ஆகிய மூன்று தொல்லியல் தளங்களில் இவ்வாதாரங்கள் கிடைக்கின்றன. இன்றைய தினத்திற்கு உருக்கிப் பிரித்தெடுத்தல் முறையில் தாமிரம் பிரித்தெடுத்ததற்கான ஆதாரம் பெலோவாடு தொல்லியல் தளத்தில் கிடைத்துள்ளது. வின்கா நாகரீகத்தைச் சார்ந்த கி.மு 5500 ஆண்டுகளுக்கு முற்பட்ட செப்புக் கோடரியும் இவ்வாதாரத்தில் அடங்கும். ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்ட உலோகங்களின் பிற அடையாளங்கள் போர்த்துக்கல்லில் உள்ள பால்மெலா. எசுப்பானியாவில் உள்ள லாசு மில்லேரசு மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் உள்ள சுடோன்யெங்கு ஆகிய இடங்களில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கிடைக்கின்றன. எனினும், வரலாற்றுக்கு முந்தைய காலங்கள் தொடர்பான ஆய்வுகள் அடிக்கடி மேற்கொள்ளப்படுவதால் தொடக்கம் தொடர்பான இறுதி முடிவை தெளிவாக வரையறுக்க முடியவில்லை. புதிய கண்டுபிடிப்புகள் மென்மேலும் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

தொடக்கக் கால உலோகங்கள் தனித்தனியான உலோகங்களாகவே அறியப்பட்டன அல்லது கிடைத்தன. செப்பு மற்றும் வெள்ளீயம் உலோகங்களை இணைப்பதன் மூலம் வெண்கலம் என்ற ஒரு உயர்ந்த உலோகம் செய்ய முடியும் என்பதை பின்னர் அறிந்தனர். வெண்கலம் என்று உலோகக் கலவை, கி.மு 3500 காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டதால் அக்க்காலம் வெண்கல வயது தொடங்கிய ஒரு பெரிய தொழில்நுட்ப மாற்றக் காலமாக அறியப்படுகிறது. வெண்கல வயதுக் காலம் மனித கலாச்சார வளர்ச்சியின் காலமாக இருந்துள்ளது. இக்காலத்தில் மிகவும் முன்னேறிய அளவில் உலோக வேலைகள் முறையாகவும் பரவலான பயன்பாட்டிலும் இருந்திருக்கிறது. இயற்கையாகவே தோன்றிய தாமிரத் தாதுக்களில் இருந்து செப்பையும் வெள்ளீயத்தையும் வெட்டி எடுத்தல் பின்னர் அவற்றை உருக்கி வெண்கலம் உருவாக்குதல் போன்ற தொழில்நுட்பங்களை வெண்கல வயதுக்காலம் உள்ளடக்கியிருந்துள்ளது. இயற்கையாகத் தோன்றும் தாதுக்களில் ஆர்சனிக் ஒரு பொதுவான மாசாக காணப்பட்டது. கி.மு 3000 ஆண்டுகளில் தாமிரம், வெள்ளீயம் தாதுக்கள் மேற்கு ஆசியாவில் அரிதாக காணப்பட்டுள்ளன. பண்டைய இந்தியாவிலும் உலோகவியல் மற்றும் இரசவாத துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருந்துள்ளது.


இரும்புக் காலம்

செப்பு அல்லது வெள்ளீயத்தை அவற்றின் தாதுக்களில் இருந்து பிரித்தெடுப்பதைவிட இரும்பை அதன் தாதுவிலிருந்து பிரித்தெடுத்து பயன்படுத்தும் உலோகமாக மாற்றுவது மிகக் கடினமான செயல்முறையாகும். கி.மு 1200 வது ஆண்டில் இட்டிடெசு எனப்படும் பண்டைய அனடோலிய மக்களால் இத்தொழில்நுட்பம் கண்டறியப்பட்டதாகத் தெரிகிறது. இக்காலமே இரும்புக் காலத்தின் தொடக்கக் காலமாகும். பிளீசுடைன் மக்களின் வெற்றியில் இரும்பைப் பிரித்தெடுத்தல் மற்றும் பயன்படுத்தல் தொழில்நுட்பம் முக்கியப்பங்கு வகித்துள்ளது.

மற்றபடி இரும்புக் காலம் என்பது பெரசு அல்லது இரும்பு உலோகவியலின் கண்டுபிடிப்பையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இரும்பு உலோகவியலின் வளர்ச்சி வரலாற்றை கடந்தகால கலாச்சார மற்றும் நாகரீகங்களின் பல்வேறு கட்டங்களில் காணமுடிகிறது. மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்திற்கு அருகில்காணப்பட்ட பண்டைய மற்றும் இடைக்கால பேரரசுகள் மற்றும் அரசுகளிலும், பண்டைய ஈரான், பண்டைய எகிப்து, பண்டைய நுபியா மற்றும் அனடோலியா (துருக்கி), பண்டைய நாக், கார்தேச், கிரேக்கர்கள் மற்றும் பண்டைய ஐரோப்பாவின் ரோமானியர்கள், இடைக்கால ஐரோப்பாவினர், பண்டைய மற்றும் இடைக்கால சீனா, பண்டைய மற்றும் இடைக்கால இந்தியா, பண்டைய மற்றும் இடைக்கால சப்பான், பகுதிகளில் இவ்வளர்ச்சியைக் காணமுடிகிறது.இரும்பு தொடர்புடைய அல்லது உலோகவியல் தொடர்பு சாதனங்களின் பல பயன்பாடுகள் மற்றும் நடைமுறைகள் பண்டைய சீனாவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஊது உலை கண்டுபிடிப்பு, வார்ப்பிரும்பு, நீர்ம இயங்கியல் சுத்தியல், மற்றும் இரட்டை இயக்க துருத்திகள் போன்ற கருவிகள் பண்டைய சீனாவில் நிறுவப்பட்டுள்ளன.


பாரம்பரிய பழமையும் அணுவியலும்

பண்டைய எகிப்தியர்கள் கிமு 4000 ஆண்டுகளுக்கு முன்பே செயற்கை வேதியியலின் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர். கிமு 1000 ஆண்டளவிலேயே பண்டைய நாகரிக மக்கள் வேதியியலின் பல்வேறு துணைப் பிரிவுகளுக்கு அடிப்படையாக அமையும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உள்ளனர். இவற்றுள் கனிம மூலங்களில் இருந்து உலோகங்களைப் பிரித்து எடுத்தல், மட்பாண்டங்களை வனைந்து மெருகிடல், நொதிக்கவைத்துக் மதுவகைகள் தயாரித்தல், ஆடைகளுக்கும், நிறந்தீட்டலுக்கும் வேண்டிய வண்ணங்களைத் தயாரித்தல், மருந்துகளையும் வாசனைப் பொருட்களையும் செய்வதற்கு தாவரங்களில் இருந்து வேதிப் பொருட்களைப் பிரித்தெடுத்தல், பாற்கட்டிகளைச் செய்தல், ஆடைகளுக்கு நிறமூட்டல், தோலைப் பதப்படுத்துதல், கொழுப்பிலிருந்து சவர்க்காரம் உற்பத்திசெய்தல், கண்ணாடி உற்பத்தி, வெண்கலம் போன்ற கலப்புலோகங்களை உருவாக்குதல் போன்றவை அடங்கும்.

வேதியியல், தாதுப் பொருட்களில் இருந்து உலோகங்களைப் பிரித்து எடுப்பதற்கு வழி சமைத்த எரிதல் என்னும் தோற்றப்பாட்டில் இருந்து தோற்றம் பெற்றதாகக் கொள்ளலாம். அடிப்படையான கோட்பாடுகளைப் புரிந்து கொள்ளாவிட்டாலும் பொன்னின் மீதிருந்த பேராசை அதனை தூய்மையாக்கும் வழிமுறைகளைக் கண்டுபிடிக்க உதவியது. இது தூய்மையாக்குதல் என்றில்லாமல் ஒரு மாற்றம் என்றே அக்காலத்தில் எண்ணியிருந்தனர். அக்காலத்து அறிஞர்கள் பலர் மலிவான உலோகங்களைப் பொன்னாக மாற்றுவதற்கான வழிமுறைகள் உள்ளன என நம்பினர். இது இரசவாதம் தோன்றுவதற்கு அடிப்படை ஆகியதுடன், மூல உலோகங்களைத் தொட்டதும் பொன்னாக மாற்றக்கூடிய "இரசவாதக்கல்"லைத் தேடும் முயற்சிகளுக்கும் வித்திட்டது.

நன்றி: விக்கிப்பீடியா

No comments