
பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்க்கும் குறைந்தபட்ச வயது 5ஆகும். ஐந்து வயதை விடக்குறைவான வயதையுடைய பிள்ளைகளை எக்காரணம்கொண்டும் அதிபர்கள் அனுமதிக்கக்கூடாது.
கல்வியமைச்சு வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி வெளியிட்டுள்ள இப்புதிய சுற்றுநிருபம் ஏலவே நடைமுறையிலுள்ள 3சுற்றறிக்கைகளை மேவியதாக அமைகிறது.
இப்புதிய சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்கள் யாவும் அடுத்தாண்டு 2018முதல் அமுலுக்கு வருகிறது.
அதில் மேலும் குறிப்பிட்டுள்ள முக்கிய சில விடயங்கள் வருமாறு:
ஜனவரி மாதம் 31ஆம் திகதியன்று பிள்ளையின் வயது 5வயதைப்பூர்த்தி செய்திருந்தால் முதலாம் தரத்திற்கு அனுமதிபெறமுடியும்.
06வயதைப்பூர்த்திசெய்த பிள்ளைகளிருந்தால் இதனை இரண்டாம்கட்டமாக நோக்கவேண்டும்.
முதலாம் வகுப்பில் சமாந்தர வகுப்புகளில் இருக்கவேண்டிய மாணவர் தொகை வரையறுக்கப்பட்டுள்ளது.
அதன்படி 2016இல் இது 40ஆகவிருந்தது. இத் தொகை 2018இல் 38ஆகவும் 2019இல் 37ஆகவும் 2020இல் 36ஆகவும் 2021இல் 35ஆகவும் அமைதல்வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆறு வகைகளில் ஒருபிள்ளையை பாடசாலைக்குச் சேர்ப்பதற்கென விண்ணப்பிக்கமுடியும்.
முதலாந்தரத்திற்கு ஒன்றில் தமிழ்மொழிமூலம் அல்லது சிங்கள மொழிமூலம் மாத்திரமே பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ளமுடியும். எந்தக்காரணம்கொண்டும் ஆங்கிலமொழிமூலம் சேர்க்கமுடியாது.
பிள்ளைகளின் எண்ணிக்கை வகுப்பொன்றை விடக்குறைவாயின் விண்ணப்பித்த பாடசாலைகள் பிறப்புச்சான்றிதழை உறுதிப்படுத்தியபின்னர் நேரடியாகச்சேர்த்துக்கொள்ளமுடியும்.
விண்ணப்பிக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை கூடுமாயின் நேர்முகப்பரீட்சையொன்றின் மூலம் மாத்திரமே சேர்த்துக்கொள்ளவேண்டும்.
நேர்முகப்பரீட்சைசபையில் அதிபர் ஆரம்பப்பிரிவுப்பொறுப்பாளர் உதவிஅதிபர் பாடசாலை அபிவிருத்திச்சங்க பிரதிநிதி மற்றும் பழையமாணவர்சங்கப்பிரதிநிதியொருவர் இதில் இடம்பெறவேண்டும்.புள்ளியிடும் முறைகள் தேர்ந்தெடுக்கும் முறைமைகள் பற்றி விரிவாகக்குறிப்பிடப்பட்டுள்ளன.
முதலாந்தரத்திற்கு பிள்ளைகளை சேர்த்துக்கொள்வதற்கான இறுதித்திகதி ஜூன் 30க்கு முன்னர் ஆகும்.
நேர்முகப்பரீட்சை செப்டம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நடாத்தப்படவேண்டும். அதன்படி தெரிவாகும் தற்காலிக பட்டியல்களை செப்.30க்கு முன்னர் அறிவித்தல் பலகைகளில் காட்சிப்படுத்தல்வேண்டும்.
மேன்முறையீடுகளை அக்.15வரை ஏற்றுக்கொள்ளப்படும். அவற்றைப்பரிசீலிப்பது அக்.25முதல் நவம்பர் 20வரையாகும். அதன்படி இறுதிப்பட்டியலை டிசம்பர் மாதம் 1ஆம் திகதி வெளியிடல்வேண்டும்.
பின்னர் முதலாவது தவணை ஆரம்பமாகும் தினத்தில் பிள்ளைகளை முதலாம்தரவகுப்புகளில் இணைத்து ஆரம்பித்தல் கட்டாயமானதாகும்.