வவுனியா பாடசாலைகள் சிலவற்றில் போதைப்பொருள் பாவனை..!


குறிப்பு: இச்செய்தி www.vavuniyanet.com இணையதளத்தில் இன்று (15.07.2017) பதிவேற்றப்பட்டிருந்தது. செய்தி பின்வருமாறு,

"வவுனியாவில் குறிப்பிட்ட சில பாடசாலைகளினுள் போதைப்பொருள்கள் பாவிக்கப்படுவதாக தொடர்ந்து எனக்கு தகவல்கள்வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக வவுனியா தெற்கு வலய பாடசாலைகளில் இவ்வாறான நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுகின்றனர்.

இதற்கு வலயக்கல்விப் பணிமனையினால் எவ்வகையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் கேள்வியெழுப்பினார். இன்று(15.07) நடைபெற்ற வவுனியா பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போதே இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தெற்கு வலய கல்விப் பணிப்பாளர் இராதாகிருஸ்ணன், இப்பிரச்சினை வவுனியா மட்டுமல்ல இலங்கை பூராகவும் உள்ளது. வவுனியா தெற்கு வலயத்தில் உள்ள பாடசாலைகளை பொறுத்தவரை பாடசாலைகளிற்குள் எவ்வாறு வருகின்றது என்பதை சரியாக உறுதிப்படுத்த முடியாதுள்ளது.

ஏனெனில் இது சம்பந்தமாக ஆசிரியர்களாலும் கதைக்கப்பட்டாலும் அதனை ஆதாரத்துடன் கொண்டு வர முடியவில்லை. என்றாலும் இப்போதைப்பொருள் செயற்பாடு மாணவர்கள் மத்தியில் தான் உள்ளது.

இதற்காக பொலிஸாருடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான செயற்பாடு எல்லா பாடசாலைகளிலும் நடைபெறுகின்றது.

குறிப்பாக ஒவ்வொரு பாடசாலையிலும் இதற்கான கடித பெட்டி வைத்துள்ளனர். அதில் மாணவர்கள் தங்களது குறிப்புக்களை போடுவதற்கு ஏதுவாக்கப்பட்டுள்ளது என்றார்."

Previous Post Next Post