Latest Updates

தூக்கக் குறைபாடு எப்படி மூளையைப் பாதிக்கும்?
போதிய தூக்கம் இல்லாமையால் மூளையில் ஏற்படும் விளைவுகள் குறித்த மிகப் பெரிய ஆய்வு ஒன்றை கனடாவில் உள்ள விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வுக்காக தாங்கள் நடத்தும் இணைய வழி அறிவுத் திறன் பரிசோதனைகளில் பங்கேற்கும்படி உலகெங்கும் உள்ள மக்களை ஒன்டாரியோவில் உள்ள வெஸ்டர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு கேட்டுக்கொண்டுள்ளது.

பகுத்தறியும் திறன், மொழியைப் புரிந்துகொள்ளும் ஆற்றல், முடிவெடுத்தல் ஆகிய திறன்களை இந்த ஆய்வுக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள கணினி வழி விளையாட்டுகள் பரிசோதிக்கின்றன.
பி.பி.சி. மருத்துவச் செய்தியாளர் ஃபெர்கஸ் வால்ஷ் இந்தப் பரிசோதனையில் தாமாக முன்வந்து கலந்துகொண்டார்.

வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி, பேராசிரியர் ஆட்ரியன் ஓவென் இந்த ஆய்வை நடத்துகிறார்.

"போதிய தூக்கம் இல்லாவிட்டால் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியும். ஆனால், அது மூளையில் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து நமக்கு குறைவாகவே தெரியும். அறிவாற்றல், நினைவுத் திறன், கவனம் குவித்தல் ஆகியவற்றை தூக்கமின்மை எப்படிப் பாதிக்கிறது என்பதை நாம் பார்க்கவேண்டும்" என்கிறார் பேரா. ஓவென்.

பரிசோதனையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வோர் ஒவ்வொருவரும் இவ் விளையாட்டுகளில் பெறும் புள்ளிகளை ஆய்வுக் குழு தொகுக்கும். ஒவ்வொருவரும் தூங்கிய நேரத்தின் அடிப்படையில் அவர்கள் பெற்ற புள்ளிகளின் வேறுபாடுகளை ஆய்வு செய்யும்.

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அளவு உறக்கம் தேவைப்படும். ஆனால், போதிய அளவு மக்கள் இந்தப் பரிசோதனையில் பங்கேற்க முன்வந்தால். நல்லமுறையில் மூளை செயல்படத் தேவையான சராசரித் தூக்க நேரம் குறித்துத் தீர்மானிக்க அது விஞ்ஞானிகளுக்கு உதவக்கூடும்.

பரிசோதனையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள தன்னார்வலர்களாக முன்வந்த வேறு நான்கு பேருடன் ஃபெர்கஸ் வால்ஷும் பரிசோதனையில் பங்கேற்றார். போதுமான உறக்கமின்மை எப்படி அறிவாற்றலைப் பாதிக்கிறது என்பதை அவர்கள் விளையாடிய கணினி சார்ந்த விளையாட்டுகள் காட்டின.


வால்ஷுடன் பங்கேற்ற தன்னார்வலர்கள்:1.ஹூமன் கஞ்ஜாவி, வயது 42, உளவியல் மருத்துவர்.
வழக்கமாக நோயாளிகளைப் பார்ப்பதற்காக இரவு நேரங்களில் அழைக்கப்படுபவர். "சாதாரணமாக ஓர் இரவில் 4-5 மணி நேரம் தூங்குவேன். போதிய உறக்கமின்மையால் இருதய நோயும், முடக்குவாதமும் ஏற்படும் ஆபத்து அதிகம் என்பது எனக்குத் தெரியும். ஆனால், பல டாக்டர்களைப் போலவே நானும் அந்த ஆபத்தை எனக்குப் பொருத்திப் பார்ப்பதில்லை," என்கிறார் அவர்.

2.ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இருவரின் தாயான சில்வி சலேவ்ஸ்கி, வயது 31.
"நல்ல இரவு என்பது, குழந்தைகள் என்னை இரண்டு மூன்று தடவைகள் மட்டுமே எழுப்பும் இரவுதான். இரவு முழுவதும் தொந்தரவு இல்லாமல் தூங்குவது எப்படி இருக்கும் என்றே எனக்கு மறந்து போனது. பெரும்பாலும் தூக்கமில்லாத இரவின் மறுநாள் பகல் பொழுது தூக்கக் கலக்கமாகவே இருக்கும்," என்கிறார் அவர்.

3.இவான் ஆக்னியூ, 75 வயது.
"ஒரே நேரத்தில் எட்டுமணி நேரம் தூங்கவேண்டும் என்பதில்லை எனக்கு. என் வயதில் எனக்கு ஒரு நேரத்தில் நான்கு மணி நேரத் தூக்கம் போதுமானது. அதன் பிறகு ஓரிரு முறை குட்டித்தூக்கம் போட்டுக்கொள்ளலாம்," என்கிறார்.

4.இரவில் நடமாடும் எலிகள் குறித்து ஆய்வு செய்யும் நரம்பியல் விஞ்ஞானி சிசிலியா க்ராமர், வயது 31.
இவர் இரவில் நீண்ட நேரம் ஆய்வகத்தில் இருப்பவர். "போதிய உறக்கமில்லை எனில், ஆய்வுக்கட்டுரை படிப்பது போன்ற சிக்கலான விஷயங்களை மறுநாள் செய்ய முடிவதில்லை," என்றார் அவர்.

இந்தப் பரிசோதனைகளுக்காக வடிவமைக்கப்பட்ட விளையாட்டுகளை கணினி, வரைப்பட்டிகை, திறன்பேசிகள் ஆகிய எதிலும் விளையாடலாம்.

'டபுள் டிரபிள்' என்னும் விளையாட்டில் நிறங்களின் பெயர்கள் வேறு நிறங்களில் எழுதப்பட்டிருக்கும். அதன் கீழே அளிக்கப்பட்டுள்ள பதில்களில் அந்த நிறங்களின் பெயர்கள் எந்த நிறத்தில் எழுதப்பட்டுள்ளதோ அந்த நிறத்தில் எழுதப்பட்ட சொல்லை செய்யவேண்டும். எடுத்துக்காட்டாக ஊதா என்ற நிறத்தின் பெயர் சிவப்பு வண்ணத்தில் எழுதப்பட்டிருந்தால், நீங்கள் சிவப்பு வண்ணத்தில் எழுதப்பட்ட சொல்லைக் கிளிக் செய்யவேண்டும். அந்த சொல் ஊதா என்பதாகக்கூட எழுதப்பட்டிருக்கலாம். குழப்புகிறதா இல்லையா!

'ஆட் ஒன் அவுட்' என்ற விளையாட்டு எளிதுபோலத் தோன்றும். ஆனால், மற்றதில் இருந்து மாறுபடும் ஓர் உருவத்தைத் தேர்வு செய்யும்போது அது சிக்கலாக மாறும். 'இலக்கண அறிவுச் சோதனை', 'தூர அளவுத் திட்டமிடல்' ஆகிய விளையாட்டுகளும் சவாலானவையே.


எப்படி பரிசோதனை நடந்தது?

இரவில் ஒருமுறையும், அதிகாலை 4 மணி வரை விழித்திருந்து, பிறகு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கி எழுந்தபிறகு ஒருமுறையும் இந்த விளையாட்டுகளை இவர்கள் விளையாடினார்கள். இவான், சிசிலியா மற்றும் வால்ஷ் ஆகியோர் மறுநாள் காலை மிக மோசமாகவே விளையாடினர். சில்வியா மட்டுமே இரவைவிட அதிக புள்ளிகள் பெற்றிருந்தார். ஹூமன் பெற்ற புள்ளிகளில் பெரிய வீழ்ச்சி இல்லை. காலையில் கொஞ்சம் தூக்கக் கலக்கமாக இருந்தாலும், குழந்தைகள் எழுந்த உடனே எழுந்து அவர்களுக்குத் தேவையானதை செய்வது தமக்குப் பழக்கம் என்பதால் தூக்கமில்லாத இரவுக்குப் பிந்திய நாளில் வேலை செய்வது தமக்குப் புதிதில்லை என்றார் அவர்.

தமது மூளையில் என்ன நடக்கிறது என்பதை அறியும் ஆர்வத்தால், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அறையில் இருக்கும்போது ஃபெர்குஸ் வால்ஷ் அறிவுத் திறன் சோதனைகளை செய்து பார்த்தார். வழக்கப்படி தூங்கிய இரவுக்குப் பிறகு ஒருமுறையும், போதிய உறக்கமில்லாத இரவுக்குப் பிறகு ஒருமுறையும் அறிவுத் திறன் சோதனைகளைச் செய்யும்போது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்துக்கொண்டார். மூளையின் ரத்த ஓட்டத்தை அடையாளம் காணும் வகையில் எடுக்கப்பட்ட ஸ்கேன் அது. கூடுதலாக செயல்பட்டுக்கொண்டிருந்த மூளையின் பகுதிகளை ஆரஞ்சு வண்ணத் திட்டுகளாக ஸ்கேன் அடையாளம் காட்டியது.

நல்ல உறக்கத்துக்குப் பின்னும், போதிய தூக்கமில்லாத நிலையிலும் எடுக்கப்பட்ட ஸ்கேன்கள் பளீரென வேறுபாடுகளைக் காட்டின. தூக்கமின்மைக்குப் பிறகு தமது மூளையின் செயல்பாடு வெகுவாகக் குறைந்திருந்ததை ஃபெர்குஸ் வால்ஷின் கவனித்தார்.


ஏன் தூக்கம் முக்கியமானது?

நாம் நம் வாழ்வின் மூன்றில் ஒரு பங்கினை தூக்கத்திலேயே செலவிடுகிறோம். உணவும் சுவாசிக்க நல்ல காற்றும் நமக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு தூரம் தூக்கமும் முக்கியம். ஆனால், '24-மணி நேரப் பண்பாடு' காரணமாக நாம் முன்னெப்போதையும் விட மிகக் குறைவாகவே தூங்குகிறோம்.

நாள்பட்ட தூக்கமின்மை நிலையால் மூளையில் ஏற்படும் விளைவுகள் குறித்து நாம் மிகமிகக் குறைவாகவே புரிதலைக் கொண்டிருக்கிறோம் என்கிறது 'நேச்சர் ரிவ்யூஸ் நியூரோசயின்ஸ்' சஞ்சிகையில் கடந்த மாதம் வெளியான ஒரு கட்டுரை. தொழில் மயமான நாடுகள் அனைத்திலும் தூக்க நேரம் மிகவும் குறைந்திருப்பதை சுட்டிக்காட்டி இது குறித்த மேலதிக ஆய்வுகள் அவசரத் தேவை என்று குறிப்பிட்டுள்ளது அக்கட்டுரை.

வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் உறக்க ஆராய்ச்சிக்கான இப் பரிசோதனைகளில் தன்னார்வமாகப் பங்கேற்போர் இந்தப் பிரச்சினையில் சமூகத்துக்கும், அறிவியலுக்கும் தேவையான விடைகளைக் கண்டறிய உதவமுடியும்.

-BBC Tamil

No comments