Latest Updates

கற்பனை எனும் பேராற்றல்..!


Related image

‘கற்பனை’ என்பது கதை எழுதுபவனின் வேண்டாத வேலை, என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறு!

வாழ்க்கையையே மாற்றி அமைக்கக் கூடியது கற்பனை! கற்பனை என்பது ஆழ் மனதின் வேலை. கற்பனை செய்யும் காட்சிகள் யாவும் நம் மனக் கண்களில் திரைப்படங்கள் போல் ஓடிக் கொண்டே இருக்கும்.

நல்லதோ, கெட்டதோ கற்பனையை, நம் ஆழ்மனது ரகசியமாக பார்த்து ரசிக்கும். ஆழ்மனம் நம் கட்டுபாட்டில் வராது. ஆனால், ஆழ்மனதில் பதிவான விஷயங்களை செயல்படுத்த நம்மைத் தூண்டும்! கெட்ட விஷயங்களை நம் ஆழ்மனதில் போட்டு காட்சிப்படுத்தி ரசித்துக் கொண்டிருந்தால், நம் ஆழ்மனம் நம்மை அறியாலேயே செயல்படுத்த தொடங்கி விடும். நம்மை ஒரு கெட்ட மனிதனாக மாற்றி விட்டுத் தான் விடும்.

ஒரு இளைஞன், அவனது ஆழ்மனதில், இடைவிடாது சைக்கிள் ஓட்டி, கின்னஸ் சாதனை புரிவது போன்று நினைத்து காட்சிப்படுத்தி ரசித்துக் கொண்டிருந்தால், அந்த செயலை செயல்படுத்த தூண்டி அதற்கான துணிச்சலையும், ஆற்றலையும் அவனுக்கு கொடுக்கும்.

ஆதலால், நாம் கற்பனை செய்து ரசிப்பது எல்லாம் உயர்ந்த எண்ணங்களாகவே இருக்க வேண்டும். மாணவ பருவமாக இருந்தால், ஒரு டாக்டராக, ஒரு இன்ஜினீயராக, ஒரு விஞ்ஞானியாக மாறி மக்களுக்கு சேவை செய்துவருதாக கற்பனை செய்து வரவேண்டும். ஆழ்மனம் அதை செயல்படுத்த தூண்டிக் கொண்டே இருக்கும்.

ஒரு சாதாரணத் தொழிலாளியாக இருந்தால், ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவராக மாறி செயல்படுவதாக கற்பனை செய்து ஆழ்மனதில் காட்சிப்படுத்தி ரசித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

எண்ணம் தான் செயல் வடிவம் பெறுகிறது! அதுவும் ஆழ்மனதில் படங்களாக ஓடும் காட்சிகளை செயல்படுத்த நம்மை அறியாமலேயே நம்மை தூண்டிக் கொண்டே இருக்கும். அதற்குத் தேவையான ஆற்றலையும் கொடுக்கக் கூடிய சக்தி நம் ஆழ்மனதிற்கு இருப்பதை, நாம் முதலில் உணர வேண்டும்.

‘கற்பனை தான் அனைத்தும்... வாழ்வில் வரவிருக்கும் ஸ்வாரசியமான விஷயங்களுக்கான வெள்ளோட்டம் அது!’ என்று இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற அறிவியலறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டின் கூட கூறியிருக்கிறார்.

எனவே, இனியாவது நம் ஆழ்மனதில் நல்ல விஷயங்களை மட்டும் கற்பனை செய்து காட்சிப்படுத்திப் பார்த்துக் கொண்டே இருப்போம்! அது நம் எதிர்கால வாழ்க்கையின் வெள்ளோட்டமாக அமையட்டும்!

-துடுப்பதி ரகுநாதன்

நன்றி : தினமலர்

No comments