அரச/தனியார் பாடசாலைகளை தரப்படுத்த நடவடிக்கை..!


 பாடசாலை பரிசோதனை  திட்டத்தின் கீழ் அரச, தனியார் பாடசாலைகள் ஆறு தரங்களாக பிரிக்கப்படவுள்ளன என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இத்தரப்படுத்தலுக்கமைய, அதி சிறந்த, சிறந்த, ஓரளவு, சிறந்த முயற்சிக்க வேண்டிய, பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய என்ன அடிப்படையில் பாடசாலைகள் தரம் பிரிக்கப்படவுள்ளன. இத்தரப்படுத்தலுக்கமைய பாடசாலைகள் மீது கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தரப்படுத்தலின் போது, பாடசாலையின் வளங்கள், ஆசிரியர் மற்றும் மாணவர்களுடைய செயற்றிறன், பொதுப்பரீட்சை அடைவு மட்டம், பாடசாலைக்கும் பெற்றோருக்கும் இடையிலான உறவு போன்ற விடயங்கள் கவனத்திற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கமைய நாட்டிலுள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகளை பரிசோதிப்பதற்கு 150 - 200 வரையான உத்தியோகத்தர்கள் இணைத்துக்கொள்வதற்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

இச்செயற்பாட்டினூடாக முப்பது வருடங்களுக்கு முன்னர் இல்லாமலாக்கப்பட்ட பாடசாலை பரிசோதகர் முறைமை மீண்டும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மேற்பார்வை, பரிசோதனை நடவடிக்கைகள் என்பன மந்தகதிக்கு சென்றுள்ளமையினால் இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வலயக் கல்வி அலுவலகம் மற்றும் கோட்டக் கல்வி அலுவலக அதிகாரிகள் பாடசாலை பரிசோதனையில் ஈடுபடுவது தற்போது அருகி வருவதாகவும் இதுவே பாடசாலைகளின் தரம் குறைவதற்கான காரணம் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Source : அரசாங்க தகவல் திணைக்களம்

Previous Post Next Post