• Latest Updates

    Monday, September 4, 2017

    அதன் பெயர் ‘கற்றல்’!

    Related image

    சில நேரம் வெற்றி பெறுகிறோம்... பிற நேரங்களில் நாம் கற்கிறோம்... தோல்வி என்பது நம்மைப் பற்றி நாமே பெறும் கருத்து!

    உங்கள் கனவுகளுக்கு என்றும் காலாவதி நாள் கிடையாது. ஒரு முறை ஆழமாக மூச்சை இழுத்து விட்டு, யோசியுங்கள். எங்கே தவறினோம் என்று புரிந்து விட்டால், வேறு மாதிரி யுக்தியுடன் முயற்சி செய்யுங்கள். இது தான் வெற்றியாளர்கள் கடைபிடிக்கும் வழிமுறை.

    வயது எப்படி ஒருவரின் முதிர்ச்சியை நிர்ணயம் செய்ய முடியாதோ (வயதானவர் கூட சில நேரம் சிறுபிள்ளைச் செயல் செய்வதில்லையா?) அப்படி உங்கள் மதிப்பெண் நிச்சயம் உங்கள் அறிவை, புத்திசாலித்தனத்தை நிர்ணயித்து விட முடியாது. இது தான் உண்மை!

    அமெரிக்காவின் கூடைப்பந்து விளையாட்டு வீரர் மைக்கேல் ஜோர்டன், தானே தன்னைப் பற்றி சொல்கிறார், ‘நான் இதுவரை 9000 ஷாட்ஸ் தவறி இருக்கிறேன், 300 ஆட்டங்கள் தோல்வி கண்டுள்ளேன், 26 முறை நான் எனது அணியை முன்னிறுத்துவேன் என்று நம்பப்பட்ட பொழுது நான் அவர்களை ஏமாற்றி இருக்கிறேன். திரும்பத் திரும்ப தோற்று தான் வெற்றி கண்டுள்ளேன்’.

    என்ன புரிகிறது? எல்லா முறையும் எல்லோரும் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றதாக வரலாறு கிடையாது (வணிகம், விளையாட்டு, காதல், அரசியல், தேர்வு, திருமணம் என்று பட்டியல் போகும்). சில நேரம் தோல்வியின் மறுபெயர் தான் ’கற்றல்’, இதனை வெகு சிரமங்களுக்கு ஊடே ஒருவர் கற்கிறார். வெற்றியும் சிரமங்கள் இல்லாமல் வருவதில்லை, என்றாலும் ஒரு முறை தோல்வி பெற்றவர் நிச்சயம் அதை அடுத்த முறை வெற்றியாக மாற்றி விட வேண்டும் என்ற வேட்கையோடு செயல்படுவதை கண்டிருப்போம்.

    தடைகளை மீறிய ஒரு வெற்றி பெறும் ஆற்றல் உங்களுக்குள் உள்ளது என்பதை கண்டறிய, நமக்கு நம் மீது நம்பிக்கை வேண்டும். ஆற்றல் நமக்குள் பொதிந்து கிடக்கிறது. தேவையான பொழுது அதனை வெளிக்கொணர்ந்து வெற்றியின் பக்கம் திருப்பி விட வேண்டும். ஒரு இரண்டு அல்லது மூன்று இலக்க எண் என்பது நானில்லை என்பதில் தீர்மானமாக இருத்தல் மிக முக்கியம்.

    வெற்றிக்கான சாவி எங்கே என்று பலருக்கு தெரியாமல் இருக்கலாம். இருப்பினும், தோல்விக்கான சாவி என்பது பிறரை திருப்தி செய்வது என்பதே. பிறரைத் திருப்திப்படுத்தவா நாம் வாழ்கிறோம்? உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். பில் கேட்ஸ் சொல்லுவார், நான் சில பாடங்களில் தோல்வி அடைந்தேன். ஆனால் எனது நண்பர் எல்லா பாடங்களிலும் வெற்றி பெற்ற பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணி புரிகிறார். ஆனால் நான் தான் அதற்கு முதலாளி. என்ன புரிந்தது?

    நிறைவாக ஒன்று சொல்கிறேன். இது உண்மையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது. ‘எல்லோரும் புத்திசாலிகள் தான். ஆனால் ஒரு மீனை, மரம் ஏறும் ஆற்றலை வைத்துத் தான் அதன் தகுதியை முடிவு செய்வோம் என்றால், அது தனது வாழ்நாள் முழுவதும் முட்டாளாகவே வாழ்ந்து மடியும்‘. மீன் என்றால் நீந்த வேண்டும். பறவை என்றால் பறக்க வேண்டும். மனிதன் என்றால் சிந்திக்க வேண்டும். இப்போது சிந்தியுங்கள் ’நீங்கள்’ என்பது இரு அல்லது மூன்று இலக்க எண்களா? அல்லது உங்கள் ஆற்றலா? முடிவு உங்கள் கையில்...


    நன்றி : தினமலர்

    www.manavarulagam.net | மாணவர்களுக்கான முதல்தர தமிழ் இணையதளம்.

    Total Pageviews