Latest Updates

பாடசாலைகளுக்குள் முறைகேடாக நடந்து கொள்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை..!

Related image

பாடசாலை கல்வி நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில் தலையீடு செய்யும் நபர்களுக்கும் அவர்களுக்கு உதவியாக இருப்பவர்களுக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

சில தொழிற்சங்கங்களும் மாணவர் குழுக்களும் பாடசாலைகளுக்குள் பிரவேசித்து கல்வி நடவடிக்கைகளுக்கு தடங்கல் ஏற்படும் விதத்தில் மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலைமையை தவிர்ப்பதற்காக கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதியும், அமைச்சினால் ஒரு சுற்றுநிருபம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைக்குள் வெளிநபர்களோ குழுக்களோ பிரவேசித்தல், மாணவர்கள் மத்தியில் உரையாற்றுதல் போன்ற செயற்பாடுகளை அதிபர்கள் ஊடாக தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்பொறுப்பு மாகாண கல்வி செயலாளர்களுக்கும், மாகாண மற்றும் வலயக் கல்விப்பணிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று வெளித்தரப்பினர் அனுமதியின்றி பாடசாலைக்குள் பிரவேசிக்கும் பட்சத்தில் அது தொடர்பான பொறுப்பு பாடசாலை அதிபருக்கு இருப்பதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அதிபரால் கட்டுப்படுத்த முடியாத சந்தர்ப்பங்களில் பொலிசாரின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தவும் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

Source : News.lk