Latest Updates

வடக்கு தொண்டர் ஆசிரியர்கள் 182 பேருக்கு சில வாரங்களில் நியமனம்..!

Image result for வி. இராதாகிருஷ்ணன்

வடக்கில் உள்ள 182 தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் இன்னும் ஒரிரு வாரங்களில் நியமனம் வழங்கப்படவுள்ளதுடன் போட்டிப்பரீட்சையினூடாக மேலும் 300இற்கும் மேற்பட்டோர் உள்வாங்கப்படவுள்ளனர் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (29) வடமாராட்சி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தின் உயர் தொழில்நுட்பபீடக் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வட மாகாணத்தில் 1164 தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டது. அவர்களில் பலர் வேறு தொழில்களுக்கு சென்றுள்ளனர். எஞ்சியிருந்து 528 பேர் ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். எனினும் இவர்களில் பலருக்கு சம்பளத் திரட்டுப் புத்தகத்தில் தொண்டர் ஆசிரியர்களாக பணியாற்றியமைக்கான விபரங்கள் பதியப்பட்டிருக்கவில்லை. யுத்தம் மற்றும் இடப்பெயர்வு காரணமாக இப்பதிவுகள் தவறிப்போயுள்ளன. இந்நிலையில் 182 பேர் மட்டுமே நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனம் இன்னும் ஓரிரு வாரங்களில் வழங்கப்படும். எஞ்சியிருக்கும் எஞ்சியிருக்கும் முன்னூறுக்கும் அதிகமானோரை அப்படியே கைவிட முடியாது. எனவே அவர்களுக்கு எவ்வாறு நியமனம் வழங்குவது சாத்தியமாகும் என்று அமைச்சு மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு, இலகுவான போட்டிப்பரீட்சையொன்றை நடத்தி உள்வாங்க தீர்மானிக்கப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Source : velaiththalam.lk