Latest Updates

நவீன இலங்கையின் ஆசிரியர் பணி சவால் மிகுந்தது..!நவீன இலங்கையின் ஆசிரியப் பணி சவால் மிகுந்தது. ஒரு புறம் வகுப்பறைகளில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் மாணவர்கள். இன்னொரு புறம் அனாவசியமாக அழுத்தம் கொடுக்கும் கல்வி அதிகாரிகள், இன்னொரு பக்கம் எல்லையின்றி பாடசாலை நிர்வாகத்தில் தலையிட்டு குழப்பும் பெற்றோர், பழைய மாணவர்கள். இவை எல்லாவற்றையும் சமாளித்து வகுப்பறைக்குச் சென்றால் Facebook, WhatsApp, TV, Cinema என சீரழிந்து வகுப்பறையில் கேவலமாக நடந்து கொள்ளும் மாணவர்கள். அவர்களை எதிர்த்து என்ன என்று கேட்டாலும் நம்மீது பாயும் மனித, சிறுவர் உரிமை சட்டங்கள். சரி அதையும் சமாளித்து வெளியே வந்தால் "உங்களுக்கென்ன? 6 மணித்தியால வேலை. அரைவாசி நாட்கள் லீவு. 20 ஆம் திகதியானா சம்பளம். பென்ஷன்.... " என வயிற்றெரிச்சலைக் கொட்டும் சுற்றம்.

வருடாந்த திட்டம் எழுதி, தினக்குறிப்பு எழுதி, வகுப்பறைக்கு சென்று, 40 - 50 சூழல்களில் இருந்து வரும் 40-50 ( சிலவேளைகளில் >50 ) மூளைகளை ஒரு முகப்படுத்தி கற்பிக்க் ஆரம்பித்தால் ஒருத்தனிடம் பேனா இருக்காது. இன்னொருத்தனிடம் கொப்பி இருக்காது. இன்னொருவன் பக்கத்தில் உள்ளவனைக் கிண்டுவான். இன்னொருத்தன் நம்மளையே கிண்டுவான். அவனுக்கு பேனா, இவனுக்கு கொப்பி கொடுத்து, அவனது சண்டைக்கு வழக்கு விசாரித்து, எவன் அநியாயமாக நடந்திருப்பினும் ஏசவும் முடியாமல், பேசவும் முடியாமல் சமாளிக்கனும். கிண்டினவனை ஏசினால் அவன் அப்பன் வந்து நிற்பான். ஏசா விட்டால் கிண்டப்பட்டவன் வந்து நிற்பான்.

அதயெல்லாம் சமாளித்து தினக்குறிப்பில் உள்ளதையெல்லாம் படிப்பித்து, மதிப்பீடு செய்து, அதை பதிந்து, Bell அடிக்கும் போது அடுத்த Class க்கு ஓடி விட வேண்டும். இல்லைன்னா அங்க 2 பேர் தலையை உடைத்துக் கொண்டு நிற்பானுகள். அதையெல்லாம் முடிச்சிட்டு ஒரு Free பாடவேளை கிடைத்தால், பண்புசார் விருத்தி வேலை. தமிழ்த் தின விழா, ஆங்கில தின விழா, சிங்கள தின போட்டி, சமூகக் கல்வி போட்டி யப்பா.... இதெல்லாம் தயார் படுத்திட்டா, சனிக்கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் போட்டிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். விளையாட்டு போட்டி, பரிசளிப்பு விழா, Anniversary Day, Annual Exhibition என வந்து விட்டால் இரவு பகல் கிடையாது. அப்போதெல்லாம் எம்மை யாரும் கவனிக்க மாட்டர்.

திடீர் என ஒருநாள் பிள்ளைக்கு சுகமில்லை என்று, மருந்து எடுத்து கொடுத்து விட்டு 15 நிமிடம் லேட்டா போனால் "இந்த மாஸ்டர்மாரே இப்படித்தான்" என்ற கதை. இதையெல்லாம் சமாளித்து நல்ல ரிஸல்ட் வந்தால் புள்ள டியுஷன் பெய்த்து படித்ததென்பர். மோசமானால் வாத்தி சரியில்யென்பர்.

இன்று பாடசாலைகள் பெற்றோர் தலையீட்டாலும், நிர்வாக சீர்கேட்டாலும் தறிகெட்டு செல்லும் நிலையில், அதை ஓரளவுக்கேனும் தடுத்துக் கொண்டிருப்பது ஆசிரியர் சமூகமே.

வீட்டில் 2 புள்ளைகளை வைத்துக் கொண்டு, அதன் தேவைகளைக் கூட நிறைவெற்ற வக்கற்ற ஒரு கூட்டம், 1000 மாணவர்களை சமாளிக்க, பல்வேறு தடைகளுக்கு மத்தியில் சிரமப்படும் ஆசிரியர்களை பார்த்து வினாத் தொடுப்பது வேடிக்கை.

அதே நேரம் வனத்தில் சிங்கங்கள் வேட்டையாடி செல்லும் வரை இரத்தம் குடிக்க காத்திருக்கும் வல்லூருகள் போல டியுஷன் ஆசாமிகளும், இன்டர் நஷனல் ஸ்கூல்காரனுகளும் பாடசாலை முறையை எப்போதும் கலாய்த்துக் கொண்டே இருப்பர்.  இலங்கை பாடசாலை மாணவர்களின் ஒழுக்கத்தை சீர் குழைத்ததில் சம பங்குதாரர்களல்லவா. அவர்கள் இரத்தம் உறிஞ்ச பார்த்துக் கொண்டே உள்ளனர்.

ஆசிரியர் படும்பாடு..
தொடரும் .............

எழுதியவர்,
ஆசிரியர் குத்தூஸ், இறக்காமம்.

No comments