Latest Updates

புலமைப்பரிசில் பரீட்சையும் மாணவர்களின் மனோநிலையும்..!
நான் சித்தியடையவில்லை என்ற ஏக்கத்துடன் தொடர்ந்து கல்வி பயிலும் மாணவன் எதிர்காலத்தில் எவ்விதம் கல்வி கற்பான்?  புலமைப் பரிசில் வெட்டுப்புள்ளி 154 ஆக இருந்தால் 153 எடுத்த மாணவர்களின் மனோநிலை எப்படி இருக்கும்? இவர்கள் குழந்தைகளல்லவா?

கடந்த 2017.10.04 ஆம் திகதி வெளியான ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மீண்டும் எம் குழந்தைச் செல்வங்கள் எல்லாம் துன்பத்திலும்¸ மனக் கிலேசத்திலும் உள்ளாகியுள்ளார்கள் எனலாம்.

கடந்த அரசு முதல் இவ்வரசும் இப்பரீட்சையை மீள்பரிசீலனை செய்வதாக கூறுகின்ற போதிலும் பயன் ஏற்படவில்லை.

இன்றய சூழ்நிலையில் பாடசாலைகளின் மதிப்பீடானது மூன்று பரீட்சைகளை மையப்படுத்தியே நோக்கப்படுகின்றது.
1. ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை
2. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை
3. க.பொ.த. உயர் தரப் பரீட்சை.
இப்பரீட்சைகளில் முதலாவது பரீட்சையான ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரிட்சையானது ''பெற்றோர் பரீட்சையாகவே'' நோக்கப்படுகிறது. பெற்றோர் தங்களது பிள்ளைகள் சித்தியடைந்தால் சமூகத்தில் தங்களுக்கு ஓர் கௌரவம் கிடைக்கிறது என்றே நினைக்கின்றார்கள். இதனால் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் பிள்ளைகளை தனியார் வகுப்புக்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் இதன் விளைவுகள் ஏராளம். அதாவது குழந்தைகள் பொழுது போக்கிற்காகவும்¸ உடல் நலத்திற்காகவும் விளையாடுவதற்கு நேரமில்லாமல் போகிறது¸ குழந்தைகள் தொடர்ச்சியாக கற்றலில் ஈடுபடுவதனால் மன உளைச்சலுக்குள்ளாகின்றார்கள். தொடர்ந்து பொருளாதாரச் சுமைகள் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.


மேலும் இம் மாணவர்களின் ஓய்வு நேரம் என்பது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள நிலையில் சமயம் தொடர்பான கற்றல்¸ கற்பித்தல் நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றன. இதன் விளைவாக இக் குழந்தைகள் சமயப் போதனைகள் இல்லாததால் எதிர் காலத்தில் சமூகத்தில் நெறி பிறழ்வதற்கு காரணமாக அமைகின்றன.

மேலும் தாய்¸ தகப்பனின் பாசம்¸ கருணை¸ அரவணைப்பு என்பன போதியளவு ஓய்வின்மை¸ போதியளவு போசாக்குணவு கிடைக்காமை என்பன போன்ற பிரச்சினைகளும் காணப்படுகின்றன.

இதே போன்று தனது பிள்ளை சித்தியடையாமல் பக்கத்து வீட்டு பிள்ளை அல்லது உறவினரின் பிள்ளைகள் மேற்படி பரீட்சையில் சித்தி பெற்றால் தங்களது பிள்ளைகளை பாராமுகமாகப் பார்க்கின்ற பெற்றோரும்¸ திட்டித் தீர்க்கின்ற பெற்றோரும் சமூகத்தில் இல்லாமல் இல்லை. ஆகவே தான் இவ்வாறான பிரச்சினைகள் எங்கள் குழந்தைச் செல்வங்களை எதிர்காலத்தில் மன நோயாளர்களாக மாற்ற இடமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இவ்வாறான பிரச்சினைகள் கொண்ட இப்பரீட்சை தொடர்பாக எமது கல்விப் புலத்தில் இருக்கின்ற கல்வியியலாளர்கள் பாராமுகமாக இருப்பதுதான் புரியாத புதிராகவுள்ளது. உண்மையில் மாணவர்களின் திறமையினை மதிப்பிடுவது பரீட்சைகளா? அல்லது வேறேதாவது காரணிகள் உள்ளதா? ஜப்பான்¸ அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்படித்தானா மதிப்பீடுகள் இடம்பெறுகின்றன? இரண்டாம் மகா யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஜப்பான் தொழிநுட்பத்தில் முன்னேறவில்லையா? தென்னாசிய நாடுகளில் இந்தியா முன்னேறவில்லையா? ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள்தான் கெட்டிக்காரர்களா? அல்லது சித்தியடையாதவர்கள்தான் முட்டாள்களா? யார் கெட்டிக்காரர்கள் யார் புத்திஜீவிகள் என்பதை கல்வியியலாளர்கள் வெளிக்கொணர வேண்டும்.
''நான் சித்தியடையவில்லை'' என்ற ஏக்கத்துடன் தொடர்ந்து கல்வி பயிலும் மாணவன் எதிர்காலத்தில் எவ்விதம் கல்வி கற்பான்? புலமைப் பரிசில் வெட்டுப்புள்ளி 154 ஆக தீர்மானித்தால் 153 எடுத்த மாணவர்களின் மனோநிலை எப்படி இருக்கும்? இவர்கள் குழந்தைகளல்லவா? இவ்விதமான வேற்றுமைகள்¸ பிரச்சினைகள் மாணவர்களுக்குள்ளே ஏன் ஏற்படுகின்றன? இதன் விளைவுகள்தான் என்ன? இவற்றைப் பற்றி சிந்திப்பது காலத்தின் தேவையாக இருக்கின்றது.

இன்று பெற்றோருக்கு மத்தியில் தாழ்வுச்சிக்கல்கள் வளர இப்பரீட்சை காரணமாக இருக்கின்றது. இதனால் குடும்பங்களுக்கு இடையில் மனக்கசப்புகள் ஏற்படவும் வாய்ப்பாக அமைகிறது.

கடந்த அக்டோபர் மாதம் 01ம் திகதி உலக சிறுவர் தினம் கொண்டாடினோம். சிறுவர்களின் உரிமைகள் பற்றி பேசினோம். ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக சிந்தித்தோமா? குழந்தைகள் எல்லோரும் சமம் என்று நினைத்தோமா? ஆகவே மேற்படி பரீட்சை தொடர்பாக ஆக்கபூர்வமான ஒரு முடிவினை அரசு எடுக்க வேண்டும். மேற்படி விடயத்தில் ஊடகங்களுக்கு பாரிய பொறுப்பு இருக்கிறது.

அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களைப் புகைப்படம் எடுப்பதும் பேட்டி எடுத்து ஊடகங்களில் காட்டுவதனாலும் ஏனைய குழந்தைகளின் உள்ளங்கள் பாதிக்கப்படாமல் இருக்குமா? வசதி படைத்தவர்கள் தங்கள் பிள்ளைகளை பயிற்சிப் புத்தகங்கள்¸ மேலதிக வகுப்புக்கள் என்பவற்றில் ஈடுபடுத்தி வெற்றி பெற நினைக்கிறார்கள். இதனால் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் குடும்பங்களின் நிலைதான் என்ன?

எனவேதான் பல்வேறு விமர்சனங்களுக்கும் சிக்கல்களுக்கும் உள்ளாகியிருக்கும் மேற்படி பரீட்சை தொடர்பாகவும்¸ மாணவர்களின் பாடசாலை மதிப்பீடு தொடர்பாகவும் ஒரு சரியான ஆக்கபூர்வமான தீர்வினையும்¸ திட்டங்களையும் எமது நாட்டு கல்வியியலாளர்கள் வகுக்க வேண்டிய தருணம் எப்போது வரும் என்பதுதான் மாணவர்களினதும் பெற்றோர்களினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

மாற்றத்தை வேண்டி நிற்கும் இவள்
 பஸ்னா தௌபீக்
கல்வி பிள்ளை நலத்துறை
சிறப்புக் கற்கை (02ம் வருடம்)
கிழக்குப் பல்கலைக்கழகம்.

Source : battinews.com

No comments