Latest Updates

காலைச்சூரியனுக்கு சமனாக ஒப்பிடப்படுகின்ற இளைஞர்கள், தற்காலத்தில் வாளுடன் , வீதிகளில் சுற்றித்திருகின்றனர்.



பாரம்பரியங்கள், பண்பாடுகளை காப்பாற்ற அதிதீவிர சிகிச்சையளிக்க வேண்டும் -பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன்.

காலைச்சூரியனுக்கு சமனாக ஒப்பிடப்படுகின்ற இளைஞர்கள், தற்காலத்தில் வாளுடன் , வீதிகளில் சுற்றித்திருகின்றனர்.

இதனால் பண்பாடு, கலாசாரம், பாரம்பரியங்கள் அழிவடைந்து இறுதி நிலையை அடைந்திருக்கின்றன. இதற்காக அதிதீவிர சிகிச்சையளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்று தாழங்குடா தேசியற் கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தார்.

கலாசார அலுவல்கள் திணைக்களமும், மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த பிரதீபா பிரபா கலாசார சிகிச்சை மற்றும் முகாம் வேலைத்திட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாழங்குடா தேசியற் கல்வியற் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தொடர்ந்தும் பீடாதிபதி உரையாற்றுகையில், பண்பாடு, கலாசாரம், பாரம்பரியங்கள் காப்பாற்றப்பட்ட வடக்கிலே வாள்வெட்டு கலாசாரம் வேரூன்றியிருக்கின்றது. மட்டக்களப்பிலே உள்ள இளைஞர்கள் என்ன செய்கின்றனர் என்பதை, மட்டக்களப்பிலே உள்ள கடற்கரை ஓரங்களை பார்த்தால் புரியும். ஒரு பிரதேசத்திலே ஒரு மாதத்திற்குள்ளே 13 தற்கொலைகள் நடைபெற்றிருக்கின்றது. இவற்றினை தடுக்கமுடியாதவர்களாக இருக்கின்றோமென்றால் எமது கலாசாரத்தின் நிலை எங்கு சென்றிருக்கின்றது என்பதனை சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

பாடசாலையில் 13வருடங்கள் கல்வி கற்று, தேசியற் கல்வியற் கல்லூரிக்கு வருகின்றவர்களை இரண்டுவருடங்களுக்குள் பண்பாட்டு ரீதியாக மாற்றியமைப்பது சவாலாக இருக்கின்றது. பரந்துவிரிந்த பண்பாடுகளை விடுத்து, சுருங்கிய சிறிய விடங்களுக்குள் தற்கால இளைஞர்கள் நின்றுகொண்டிருக்கின்றனர்.

அறிவியல் ரீதியாக அனைவரும் சிந்திக்க வேண்டும், சாதி, மத பேதங்களை கடந்து மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும். சமூகப்பொறுப்புடனும், பண்பாடு கலாசாரம், பாரம்பரியங்கள் அழிவடைந்து இறுதிநிலையில் இருந்து கொண்டிருக்கின்றது. இவ்வாறான தருணத்தில் சிகிச்சையளித்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் அனைவரும் நின்றுகொண்டிருக்கின்றோம். இதற்காக இளைஞர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார் என்று அவர் குறிப்பிட்டார்.
குறித்த முகாமில் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த பல இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டனர்.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்தநிகழ்வில், உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன் பீடாதிபதி எஸ்.ராஜேந்திரன் மற்றும் வளவாளர்களும், உத்தியோகத்தர்களும் இணைந்துகொண்டனர்.

Source : News.lk