Latest Updates

மாணவர்களிடத்தே ஏற்படும் சமூகம் சார்பான பிரச்சினைகள்..!


Related image

சமூகத்தை பிரதிபலிக்கும் பாடசாலையில் உயிர்த்துடிப்பானவர்களாகவும், விளைவுகளை சமூகத்திற்கும் , நாட்டிற்கும்  அளிப்பவர்களாவும்  மாணவர்கள் காணப்படுகின்றனர். இத்தகைய மாணவர்களுக்கு கற்றலை மேற்கொண்டு செல்வதற்கு பல தடைகள் வாழ்வில் ஏற்படுகின்றது. அந்த வகையில் மாணவர்களுக்கு  ஏற்படும் அநேகமான பிரச்சினைகள் தற்காப்பு நுண்முறை சார்ந்தனவாக அமைவதை அவதானிக்கலாம். அவர்கள் எதிர்நோக்கம் சமூகம் சார் பிரச்சினைகளாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம் :

• தாழ்வுச் சிக்கல்
• விசித்திரப்போக்கான நடத்தை
• மற்றவர்களில் அளவுக்கதிகமாகத் தங்கியிருத்தல்
• நெறிபிறழ்வு
• பாலியல் நடத்தை விலகல்
• அறநெறிசார நடத்தை
• வன்முறை நடத்தை
• தனிமை நாடல்
• கவனம் தேடுதல்
• புறத்தேற்றிக் காணுதல்
• பகிடிவதை
• பரிதாபம் தேடுதல்

தாழ்வுச் சிக்கல் - தன்னைப்பற்றி மிகத் தாழ்வான சுய எண்ணக்கருவைக் கொண்டிருத்தல். தன்னுடைய திறன்களை மிக மட்டமாக மதிப்பிடுவதால், சமூகக்கூட்டங்கள் குழுக்கள் ஆகியவற்றின் செயற்பாடுகளில் பங்குகொள்வதில் வெறுப்பு, பதட்டம் போன்ற மனவெழுச்சிகளுக்கு உட்பட்டு விலகுதல். சில மாணவர்கள் தமது தாழ்வு மனப்பான்மையை மூடி மறைப்பதன்பொருட்டு ஆக்கிரமிப்பு போன்ற பிரதியீட்டு நடத்தையில் ஈடுபடுவர். தாழ்வுச் சிக்கல் ஒருவரில் ஆழமாக வேரூன்றி, ஆளுமைச் சீர்கேடு ஏற்படின் உளப்பரிகாரம் தேவைப்படும்.

விசித்திரப்போக்கான நடத்தை - இவர்கள் தனிப்பட்ட பழக்க வழக்கங்கள், பண்புகள், தோற்றங்கள், நடத்தைக் கோலங்கள் ஆகியவற்றைக் கொண்டவர்களாக இருப்பர். தமது தோற்றம், நடத்தைகள் ஆகியன மற்றவர்களில் ஏற்படுத்தப்படும் துலங்கலைப்பற்றி அக்கறை காட்டமாட்டார்கள். மற்றையோர் தங்களைப்பற்றி எது வேண்டுமென்றாலும் நினைத்துக்கொள்ளட்டும் என்ற மனப்பாங்கு உடையோராக இருப்பார். தாங்கள் மற்ற மாணவர்களிலிருந்து பெருமளவு வேறுபட்டுக் காணப்படுகிறார்கள் என்ற உணர்வு அவர்களுக்கு உண்டெனினும், அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. இவர்களில் தீவிர சார்பெண்ணங்களும் காணப்படலாம்.

மற்றவர்களில் அளவுக்கதிகமாகத் தங்கியிருத்தல் -  இவர்கள் பயமும் பாதுகாப்பற்ற உணர்வும் உடையவர்கள். மனத்திடத்துடன் எத்தொழிலிலும் ஈடுபட முன்வரமாட்டார்கள். தமது வேலைகளைச் செய்வதற்கு எப்பொழுதும் மற்றவர்களின் உதவியை நாடுவார்கள். மனவெழுச்சி முதிர்ச்சியற்றுக் காணப்படுவர். உடல் நடுக்கம், திக்கிப் பேசுதல், நகம் கடித்தல், தமது காதுகளை இழுத்தல் போன்ற நடத்தைகள் இவர்களில் தோன்றலாம்.

நெறிபிறழ்வு - நெறிபிறழ்வான மாணவர்களின் நடத்தையால் பாடசாலையும் சமூகமும் பெரிதும் பாதிக்கப்படும்.

பாலியல் நடத்தை விலகல் - சமூகம் ஏற்றுக் கொள்ளாத விகாரமான பாலியல் நடத்தைகளில் ஈடுபடுபவர். எதிர்ப்பாலரைக் கேலி செய்வதில் இன்பமடைதலும், இடம்பெயர்ந்த ஒரு பாலியல் நடத்தையாகக் கருதப்படுகின்றது.

அறநெறிசாரா நடத்தை - பொய் பேசுதல், களவெடுத்தல், தமது வாக்கைக் காப்பாற்றாமை, அமைதியின்மை, நம்பமுடியாத தன்மை ஆகிய பண்புகளை இவர்களில் இனங்காணலாம். இவர்களில், அதிகம் விருத்தி ஏற்படாமையால் அறநெறி விருத்தி பாதிக்கப்படுகின்றது.

வன்முறை நடத்தை : வன்செயல் நடத்தை தற்காப்பு நுட்பமுறை எனக் கருதப்படுகின்றது. மனமுறிவுகள் ஏற்படும்போது  அவற்றைச் சமாளிப்பதற்காக ஒருவர் வன்செயலில் ஈடுபடலாம். வன்செயல்கள் நேரான, மறைமுகமான அல்லது இடம்பெயர்ந்ததாக அமையலாம். வன்செயலுக்கு உதாரணமாகப் பின்வருவனவற்றைக் கூறலாம். பாடசாலைப் பொருட்களைச் சேதப்படுத்தல், ஆசிரியர் அதிபர் ஆகியோருக்குச் சவால்விடுதல், குழுச்சண்டைகள், குழப்பம் விளைவித்தல் ஆகியன.

தனிமை நாடல் : தமது வகுப்பில் ஒப்பீட்டு ரீதியில் மற்றவர்களை விடத் தாழ்ந்து காணப்படுபவர்கள் தன்னிழிவு மனப்பாங்கினால் மற்றவர்களுடன் நல்ல தொடர்புகளை ஏற்படுத்துவதில் தோல்விகளைக் கண்டு, தனிமையை நாடி ஒதுங்கி வாழ முற்படுவர். இத்தனிமையை நாடி ஒதுங்கி வாழ முற்படுவர். இத்தனிமை நாட்ட நடத்தையை ஆரம்பத்திலேயே இனங்கண்டு ஆலோசனை வழங்காவிடில், காலப்போக்கில் அவர்கள் உளக்கோளாறினால் பாதிக்கப்படலாம்.

கவனம் தேடுதல் - நல்ல முறைகளில் மற்றவர்களின் கவனத்தைப் பெறமுடியாதவர்கள் சில தேவையற்ற குழப்பமான நடத்தைகளை மேற்கொண்டு தம்பால் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பர். திடீரெனச் சத்தம்போடுதல், வேண்டுமென்றே பொருள்களைக் கீழே வீழ்த்துதல் ஆகிய நடத்தைகளை இங்கு குறிப்பிடலாம்.

புறத்தேற்றிக் காணுதல் - ஒருவர் தனது குற்றங்கள், தாழ்வுகள், பிழைகள், தேவைகள் ஆகியவற்றை மற்றவர்களில் புறத்தேற்றி, அவர்களில் இத்தகைய குற்றங்கள் இருப்பதாகக் குறைகூறுதல், புறங்கூறுதல் ஆகியன.

பகிடிவதை - பகிடிவதைக்கான வித்து பாடசாலைகளிலே விதைக்கப்படுகின்றது. இப்பகிடிவதையே மற்றைய பல சமூக வன்செயல்களுக்குக் காரணமாக உள்ளதெனச் சமூக உளவியல் ஆய்வுகள் கணிக்கின்றன. 'பகிடி என்று ஆரம்பிக்கப்பட்ட வதை' இப்போது உளிரைப்பலிகொள்ளுமளவிற்கும், மூளையைப் பாதிக்கும் அளவிற்கும் தற்கொலைக்கும் காரணமாக மாறியுள்ளது. பகிடிவதையைக் கட்டுப்படுத்தாவிடில், அதில் ஈடுபடும் மாணவர்களும் அதனாற் பாதிக்கப்பட்டவர்களும் வன்செயல் நடத்தையுடையவர்களாக வளருவர். 40மூ ஆன வன்செயல்களுக்கு இதுவே மூலகாரணமாக உள்ளதென ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

பரிதாபம் தேடுதல் - மற்றவர்களின் பரிதாபத்தைப் பெறுவதற்காகத் தம் நிலையை உண்மைக்குப் புறம்பாகத் தாழ்த்திக்கூறி, மற்றவர்களின் பரிதாபத்தைப் பெற்று அதில் சந்தோசமடைதல்.
மாணவர்களிடத்தில் அதிகமாக இப்பிரச்சினைகளைக் காணலாம் அதிலும் குறிப்பாக கட்டிளமைப்பருவ மாணவர்களில் மேற்கூறியவாறான நடத்தைகளைக் கூடுதலாக இனங்காணலாம். இப்பிரச்சினைகள் ஏற்பட்டபின் அவற்றைத் தீர்க்க முற்படுவதுடன் நின்றுவிடாமல், அவை ஏற்படாமல் இருப்பதற்கும் முற்பாதுகாப்பாக மாணவர்களுக்குச் சமூகம் சார்பான நடத்தைகள் பற்றிய வழிகாட்டல் ஆலோசனையை வழங்க வேண்டும். பரீட்சைக்கு பழக்கப்படுத்துடன் நின்று விடாது மாணவ மனங்களை நல்வழிக்கு கொண்டு செல்வதனூடாகவே மேற்குறிப்பிட்ட பல பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

டிலானி யேசுஐயா 
உதவி விரிவுரையாளர்
கல்வி பிள்ளைநலத்துறை 
கிழக்குப்பல்கலைக்கழகம்

Source : battinews.com

No comments