Latest Updates

முன்மாதிரியான பாடசாலையை உருவாக்குவதில் அறிவுபூர்வமான அதிபர் முகாமைத்துவம்.


Image result for management

நவீன சூழலுக்கேற்ப ஆற்றலும் ஆளுமையுமுள்ள கற்றல் கற்பித்தலில் ஈடுபடுகின்ற  சமூகத்தை நோக்கிய அத்திவாரமிடலில் பாடசாலையானது இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகின்றது. இன்றைய நவீன உலகிற்கியைந்தாற்போல் எதிர்கால தலைவர்களை நிகழ்கால வகுப்பறைகளில் விளைவிக்க முயலும் பாடசாலைகளின் பிரதான பங்குதாரர்களான ஆசிரியர்களும் அதன் கதாநாயகர்களாக அதிபர்களும் காணப்படுகின்றனர்.

அந்த வகையில் 2016 இலங்கை கல்விஅமைச்சின் பாடசாலை தொகைமதிப்பின்படி 10,162 பாடசாலைகளும் 4,143,330 மாணவர்களும் காணப்படுகின்றனர். இவற்றை முகாமைத்துவம் செய்துமுன்மாதிரியானதும், வெற்றிகரமுமான  பாடசாலைகளை உருவாக்குவதில் அதிபர்களின் முகாமைத்திறன் இன்றியமையாதவொன்றாகும். அதிபர் முகாமைத்திறனில் குறைபாடுகாணப்படின் முழுப்பாடசாலையின் நிர்வாகமும் நிர்க்கதியான நிலைக்குத்தள்ளப்படும் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.

அதிபர் பாடசாலையின் முக்கிய இடத்திலுள்ளதால் முறைசார்காரியாலய நிர்வாகியாக மட்டுமன்றி முழுச்சமூகத்துடனும் இயைந்தவராக காணப்படவேண்டியதோடு மிதவாதமான அதிகாரப்பணியில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்பவராகவும் அத்தோடு முழுமையாக பாடசாலைக்கு அடிமையாகாமலும் சுயமுடிவுகளை மேற்க்கொள்ளாமலும் பாடசாலையின் அனைத்து தரப்பினருடனும் இணைந்து நடப்பவராக இருப்பதே சிறந்ததாகும்.

இருப்பினும் முகாமைத்துவ திறன்தரத்தை இனங்காண்பதால் அவர் சிறந்த நிர்வாகியா? இல்லையா?என இனங்காண்பது சாத்தியமற்றது. ஆகவே தோன்றுகின்ற சந்தர்ப்ப சூழலுக்கேற்ப நிர்வாகமுறைகளை பொருத்தமாக கையாளக்கூடிய திறனையே முன்மாதிரியான முகாமைத்திறனுடைய அதிபர் கொண்டிருப்பார் .இவ்வாறு வெற்றிகரமாக கல்விநிர்வாக நடவடிக்கையை மேற்க்கொள்வதற்கு தவைமைத்துவம், குழுச்செயல், தீர்மானம் செய்தல், திட்டமிடல், ஆளணி முகாமை, சமூக அபிவிருத்தி, போன்ற திறன்கள் இன்றியமையாதனவாகும் .

அதிபரின் தலைமைத்துவத்தை அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஓரதிபர் தலைவராக முடியும் .இது மற்றவர்கள் மீது பலவந்தமா திணிக்கப்படுவதல்ல.முழுப்பாடசாலையிலும் வெளிச்சமூகத்திலிருந்தும் தோற்றம் பெறவேண்டியவை. இவ்வங்கீகாரத்தினைப் பெற பாடசாலையிலுள்ள ஆளணியனருடன் அனைத்து விடயங்களிலும் இணைந்து பயணித்தால் மட்டுமே முடியும். பாடசாலையின்  அபிவிருத்திக்கான திட்டங்களை தூரநோக்குடன் திட்டமிடல் அதிபரின் இன்றியமையாத கடமையாகும். பாடசாலையின் வரலாறு தொடர்பான முழுஅறிவுடன் நேரமுகாமைத்துவ விதிகளுக்குட்பட்டு தினசரி செயற்பாடுகளை திட்டமிடுவதோடு ஆளணி முகாமை, கல்வி மற்றும் பிற நடவடிக்கை, கலைத்திட்ட அபிவிருத்தி, பாடசாலைகளை நவீனமயப்படுத்தும் திட்டங்களோடு கல்வித்திட்டமிடலின் பிரதான இடத்தை  வகிக்கும் பிள்ளைகளின் மனப்பாங்கு, சூழல் நிலைமைகளை கவனத்தில் கொண்டு திட்டமிடல்களை வினைத்திறனான அதிபர் உருவாக்கியிருப்பார்.

குழுத்தீர்மானமும் கூட்டுநடவடிக்கையும் வெற்றிகரமான பாடசாலை முகாமைக்கு இன்றியமையாதவொன்றாகும் .பிரச்சினைகளின் போது தனித்து முடிவெடுத்தலென்பது சாத்தியமற்றது;ஏனெனில் தனித்து முடிவெடுக்கும் போது தவறுகள் நிகழலாம் பாடசாலையின் ஆளணியினருடன் கலந்தாலோசித்து முடிவுகளை பெற விளைவதனூடாக பல்வேறு தரப்பினரின் கருத்துக்களிலும் அனுபவங்களிலும் ஆலோசனைகளிலுமிருந்து சிறந்த முடிவுகளை காலசூழல்தேவைகளுக்கேற்றவாறு பெறக்கூடியதாகவிருக்கும். அத்தோடு பாடசாலையின் நிர்வாக முகாமைத்துவம் சார் நடவடிக்கைகளில் கூட்டுநடவடிக்கை இன்றியமையாததாகும். ஏனெனில் 'அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு' பாடசாலை நிர்வாகம், முகாமை சார் நடவடிக்கைகளில் சுயேச்சையாக செயற்பட முடியாது. கூட்டாக இணைந்து செயற்பட்டால் தான் முன்மாதிரியான வெற்றிகரமான பாடசாலையை உருவாக்க முடியும் .கல்விசார் நிறுவனங்களின் நோக்கங்கள் அடையப்பட அதிபர், ஆசிரியர்  ஏனைய ஊழியர்களுக்கிடையேயான கூட்டு சாதனைகளின் விளைவுகளென கருதப்படுவதோடு இவ்வாறான நிலைமைகளில் பொருளாதார ரீதியான நன்மைகளை விட உளவியல் ரீதியான திருப்தியே பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு வெற்றியடைய அதிபர் தொடக்கம் மாணவர்கள் வரை கூட்டாக செயற்படுவதோடு விளையும் வெற்றியை அதிபரின் சாதனையாக மார்தட்டிக் கொள்ளாமல் முழுப்பாடசாலை சார் சமூகத்திற்கும் அதனை  பொதுவுடமையாக்க வேண்டும் .இருப்பினும் இன்று சில பாடசாலைகளில் இதற்கு எதிர்மறையாகவே நடைபெறுகிறது. இதனால் பாடசாலையினுள் முரண்பாடுகளும் மனக்கசப்புக்களும் தோன்றக்கூடியதை அவதானிக்க முடிகிறது.

வெற்றிகரமான முகாமையானது தனது தொடர்புகளை பாடசாலையின் உள்ளக ஆளணியினருடன் மாத்திரம் வைத்துக்கொள்ளாமல் பாடசாலையின் அயற்ச்சூழலுடனும் பெற்றோர், பழைய  மாணவர்கள் அரச , தனியார் நிறுவனங்களுடன் பலமான தொடர்பினை பேணிக்கொள்ளலானது வெற்றிகரமான பாடசாலையை உருவாக்குவதில் பல வழிகளிலும் பாரிய பங்களிப்பினை வழங்கும் . மேலும் ஒவ்வொரு அதிபர்களும் நவீன சூழலுக்கேற்ற தொழினுட்பறிவினையும் கட்டளை விதிமுறைகளையும் அறிந்திருப்பதோடு அதனைப்பிரயோகிக்கவும் தெரிந்திருத்தல் இன்றியமையாததாகும். அத்தோடு பாடசாலையின் அனைத்துத்தரப்பினரினதும் ஒழுக்கம்சார் அம்சங்களில் கவனம் செலுத்துபவாரகவும் சுயவொழுக்கத்தை பேணுபவராகவும் காணப்படுவதே முகாமையின் வெற்றியின் இரகசியமாகும்.

இருப்பினும் தற்கால பாடசாலைகளில் அதிபர் முகாமைத்துவதிறனானது அரசியல் செல்வாக்கு , தகுதியானவர்கள் நியமிக்கப்படாமை, பாடசாலையில் நடைபெறும் ஊழல்கள் அதாவது தரம் ஒன்று முதல் உயர்தரம் வரை மாணவர்களை அனுமதிப்பதற்காகவும் வேறுபல செயற்பாடுகளுக்காகவும் ஒரு சில பாடசாலை அதிபர்களால் இலஞ்சம் பெறப்படலானது முழுப்பாடசாலை அதிபர்களுக்கும் அவப்பெயரை ஈட்டிக்கொடுக்கிறது . அது போலவே நேரமுகாமைத்துவமின்மை ' கல்வித்திணைக்களங்களால் வெளியிடப்படும் வருடாந்த அமுலாக்கல் திட்டம், மூன்றாண்டு அமுலாக்கல் திட்டம் போன்றன அமுல்படுத்தப்பட்டாலும் அதனை  உரிய வகையில் செயற்படுத்தப்படாமை போன்றன இன்று பரவலாக விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அம்சமாகும்.

எனவே கோளமயமாக்கலுக்கேற்றவாறு வெற்றிகரமான முன்மாதிரியான பாடசாலையை உருவாக்குவதற்கு காலசூழல் தேவைக்கேற்றாற் போல் அதிபர் தன்னை சகல வகையிலும் பாடசாலைச்சமூகத்தோடு இணைந்து பயணிப்பதோடு தனது பொறுப்புக்களையும் கடமைகளையும் செவ்வனே நிறைவேற்றும் திறன் காணப்படுமாயின் மாறிவரும் யுகத்திற்கேற்ப முன்மாதிரியான பாடசாலையை உருவாக்க முடியுமென்பதில் சிறிதேனும் ஐயமில்லை..


ஸரீபா முஸ்தபா
கல்வியியல் மற்றும் பிள்ளைநலத்துறை
சிறப்புக்கற்கை (2ம் வருடம்)
கிழக்குப்பல்கலைக்கழகம்.

Source : battinews.com

No comments