Latest Updates

கற்றலுக்கு கைகொடுக்கும் தொழில்நுட்பங்கள்..!


Related image

இன்று நாம் அதிவேகமாகப் பல புதுமைகளைப் படைக்கும் நவீன தொழில்நுட்ப உலகில் வாழ்ந்துவருகிறோம். இந்தத் தொழில்நுட்பம் நமது வாழ்க்கையில் பொழுதுபோக்கு முதல் பொதுசேவை வரை பன்முகத்தன்மையோடு ஒன்றுகலந்துவிட்டது. இந்தத் தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் கணினியும், செல்போன்களும் சார்ந்த தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்துள்ளன.இவை கற்பித்தல்முறையைத் தனித்துவம் மிக்கதாக மாற்றுவதிலும் பெரும்பங்கு வகிக்கின்றன. நம்மைச் சுற்றி நிறைந்துள்ள தொழில்நுட்பங்களால் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த நிலையிலிருந்து மிகப் பெரிய மாற்றத்துக்குள் நுழைந்துள்ளோம். இந்தப் புதுப்புதுத் தொழில்நுட்ப வளர்ச்சி புதிதாகப் பலவற்றை அதிக அளவில் கற்றுக்கொள்ளச் செய்திருக்கிறது. அதில் சிறப்புமிக்க கற்றலுக்கான 5 தொழில்நுட்பங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்.

Related image

1. தேடுதல் பொறிகள் (Search Engines)
தேடுதல் பொறிகள் என்பது இந்தத் தொழில்நுட்பத்தின் தொடக்கம் எனலாம். ஏராளமான தேடு பொறிகள் உள்ளன. நாம் இவற்றைப் பயன்படுத்தி எந்த வகையான தகவல்களையும் பெற முடியும். முன்பெல்லாம் ஒருவரைப் பற்றி சொல்லும்போது, ‘அவன் கெட்டிக்காரன், விரல் நுனியில் தகவல்களை வைத்திருப்பான்’ என்பார்கள். இப்போது விரலின் நுனியை கீ-பேடில், டச் ஸ்கிரீனில் வைத்தாலே தகவல் கொட்டும் காலமாகிவிட்டது. நவீன தேடுபொறிகளான Google, Bing, yahoo ஆகியவை நாம் தேடும் வினாக்களுக்கான பதிலைக் கொண்டுவரும். இவை நம்மைத் தங்கள் வாடிக்கையாளர்களாக்கிவிட்டன. நாம் கீ போர்டில் ஒருசில வார்த்தைகளைத் தட்டினாலே அது தொடர்பான முழு விவரங்களையும் கொட்டுகின்றன. அதனால் இருந்த இடத்தில் இருந்துகொண்டே பல தகவல்களையும் நாம் அறிந்துகொள்ள முடிகிறது.

Image result for youtube

2. You Tube (வலை ஒளிக்காட்சி)
யு-டியூப் என்னும் வலை ஒளிக்காட்சி மற்றுமொரு தேடுபொறி ஆகும். இதன்மூலம் எண்ணிலடங்கா காணொளிகளை (Video) நமக்குத் தேவையானபோது தேடிப்பெறலாம். இதில் தினமும் ஏராளமான காணொளிகள் உலகம் முழுவதிலும் இருந்து வலையொளியாளர்களால் பதிவேற்றப்படுகிறது. இதன்மூலம் நாம் பல புதிய புதிய தகவல்களை ஒலியுடன் கூடிய காணொளியாகக் காணமுடியும். மேலும் யு-டியூப்பைப் பயன்படுத்துபவர்களும் தன்னுடைய பதிவுகளையும் படைப்புகளையும் பதிவேற்றி கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள முடியும். இதுவும் தொழில்நுட்பம் தொடங்கி தொலைக்காட்சி நிகழ்ச்சி வரை பல்வேறு தகவல்களைக் கொண்டு புதுப் புது வாய்ப்பு களை ஏற்படுத்தித் தருகிறது.

Image result for google scholar

3.Google Scholar (கூகுள் கல்வி)
நாம் கல்வி கற்பவராகவோ அல்லது ஆய்வு மாணவராகவோ இருப்போமானால் நமக்கு மிகவும் பயன்படும் தொழில்நுட்பம் Google Scholar ஆகும். கூகுளைப் போலவே இங்கும் பல்வேறு வகையான தேடுதல் வாய்ப்புகள் உள்ளன. உலகம் முழுவதும் உள்ள சிறந்த படைப்பாளிகள், ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளைப் பதிவேற்றம் செய்கின்றனர். நாம் கூகுள் ஸ்காலர் மூலம்  நமக்குத் தேவையான புத்தகங்களையும் ஆய்வறிக்கைகளையும் படைப்புகளையும் PDF ஆக தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.

Related image

4. இணையவழி வகுப்புகள் (Online Courses)
தகவல்களைத் தேடுவது மட்டுமே கற்றுக்கொள்வதற்கான வழி ஆகாது. மேலும் இணையவழிப் பயிற்சி வகுப்புகளைப் பல கல்வி நிறுவனங்களும் அனுபவம் வாய்ந்த பல ஆசிரியர்களும் பேராசிரியர்களும் நடத்தி வருகின்றனர். இவர்கள் பல்வேறு தலைப்பு களிலும் இணைய வகுப்புகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. யாரும் எளிதில் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய தனிநபரை மையப்படுத்திய கற்பித்தல் முறை உருவாக்கப்படுகிறது.

இதனை Massive Open Online Courses  (MOOC) என்கிறோம். இவை மாணவர்கள் தாமாகவே படித்துக்கொள்ளும் வகையில் உள்ளது. தன்னார்வம் மிக்க மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படக்கூடியது. இவை பல கால அளவுகளில் வரையறைக்குட்பட்டு நடத்தப்படுகின்றன. இந்த இணையவழிக் கல்வி பணம் செலுத்தியும் இலவசமாகவும் கற்கும் வகையில் உள்ளது. மிகவும் தரமான கல்வி இங்கு இணைய வழியாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. பல கல்வி நிறுவனங்களும் கல்வியாளர்களும் இப்படிப்பட்ட வகுப்புகளை நடத்தி வருகின்றனர். அவற்றில் Coursera, khan Academy, Udemy, Udacity, Feture Learn ஆகியவை மிகச்சிறந்த கற்றல் வாய்ப்பை அளிக்கின்றன.

Related image

5. சமூக ஊடகங்கள் (Social Media Networks)
நம்புகிறீர்களோ இல்லையோ சமூக ஊடகங்கள் இந்தத் தலைமுறையின் நேரங்களை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்கின்றன. சிலர் ஒரு சமூக ஊடகத்தைப் பயன்படுத்துகின்றனர். சிலர் பல சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். சமூக ஊடகங்களால் நன்மையும் தீமையும் கலந்தே உள்ளன. சிலர் அதை நல்ல வழியில் பயன்படுத்துகின்றனர். சிலர் அதைத் தவறான வழியில் பயன்படுத்துகின்றனர்.

நாம் அதனைச் சரியாகப் பயன்படுத்தும்போது அது பயனுள்ள கற்றல் தளமாக மாறுகிறது. பல கல்விக் குழுக்கள், பக்கங்கள், நேரலைப் பகிர்வுகள், சேகரிப்புகள், சமூகக் குழுக்கள் ஆகியவற்றைச் சமூக ஊடகங்கள் மூலம் நமக்குத் தேவையான கற்பித்தல் உபகரணங்கள், ஆலோசனைகள், யுக்திகள், வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மேற்கோள்கள் மற்றும் கல்வி தொடர்பான அனைத்துத் தகவல்களும் கிடைக்கின்றன.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

Source : Dinakaran.com

No comments