Latest Updates

பரீட்சைக்காக தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு..!பரீட்சைக்காக தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் கட்டாயம் வாசிக்கவும்..!

ஒரு மனிதனுடைய வெற்றி என்பது எதில் அடங்கியிருக்கிறது?

பேரறிஞர் தனிஸ்லாஸ், இளைஞர் கூட்டத்தில் இந்தக் கேள்வியை எழுப்பினார். விதவிதமான பதில்கள் வந்து விழுந்தன. பொருளாதாரத்தில் வளர்ந்து வீடு, கார் என பெரும் வளர்ச்சியடைவது; நிறைய பணம் சேர்த்து எப்போதும் சந்தோஷமாக இருப்பது; நம்மை இகழ்ந்தவர்கள் அதிசயப்படும்படியான வசதியான வாழ்கை நடத்துவது; நம்மை சார்ந்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய அளவுக்கு உயர்வது; பெரிய படிப்பு படித்து, பெரிய வேலையில் சேர்வது; சொந்தமாக தொழில் தொடங்கி 100 பேருக்காவது வேலைக் கொடுப்பது... இப்படி நிறைய பதில்கள்!

கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், நாம் ஒப்புக்கொள்ள மறுக்கிற உண்மை ஒன்று இருக்கிறது. அது, 'நம்முடைய வெற்றி என்பது, மற்றவரின் தோல்வியில் இருக்கிறது.' ஆம், நம்மையும் அறியாமல் நமக்குள் ஒழிந்து கிடக்கிற வெற்றி குறித்த சிந்தனை இதுதான்.

இப்படி யோசிப்பதில் தவறு ஒன்றும் இல்லை. அது இயல்புதான் . இங்கே வெற்றி என்பது அப்படிதான் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறது. இரண்டு அணிகள் விளையாடுகிற போது ஒருவர் தோற்றால் தான், இன்னொருவர் வெற்றிப்பெற முடியும். நான் முதல் மாணவனாக வரவேண்டுமென்றால், யாரோ ஒருவர் இரண்டாவது மாணவனாக வர வேண்டும்.

இந்தியா 250 ரன்கள் எடுத்திருக்கிறது, இங்கிலாந்து 249 ரன்கள் எடுத்துப் பின்தங்கினால்தான் இந்தியாவுக்கு வெற்றி. நம்பர் 1 யாரோ, அவரே இங்கு வெற்றிப் பெற்றவர். ஆனால் நம்பர் 2 இல்லாமல் நம்பர் 1க்கு இங்கு மரியாதையில்லை. வில்லன்கள் இல்லாமல் ஹீரோக்கள் ஜெயிக்க முடியாதது மாதிரி!

ஆக, நாம் ஜெயிப்பதை விட இன்னொருவர் தோற்பது முக்கியமாகி விடுகிறது. காலம் காலமாக இப்படித்தானே.... இதுல புதுசா என்ன இருக்கு என்று தோன்றலாம். இருக்கே!

இலக்கை நோக்கி ஆர்வத்தோடும் உழைப்போடும் பயணிப்பது ஒரு ரகம். இன்னொருவன் என்ன செய்கிறான் என்பதைக் கவனித்துக்கொண்டு பதறப்பதற ஓடுவது இன்னொரு ரகம். முதலாவது ரகம், வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்பில் இயங்குவது. இரண்டாவது ரகம், தோற்றுவிடக்கூடாது என்ற பயத்தில் இயங்குவது!

இப்போது பொதுத் தேர்வுகள் தொடங்கப் போகின்றன. பரீட்சை தொடங்குவதற்கு முன்பு, நண்பர்களுக்குள் ஒரு கலந்துரையாடல் நடக்கும். யார் யார் ..... என்ன என்ன படித்து இருக்கிறார்கள் என்று. 'சுரேஸ் மூணாவது சேப்டர் படிச்சுட்டியா? நான் அதை நல்லாப் படிச்சிருக்கேன்' என்று ரமேஷ் சொல்வார். எல்லாவற்றையும் நன்றாகப் படித்திருக்கும் சுரேஷ், மூன்றாவது சேப்டர் மட்டும் கொஞ்சம் சுமாராகப் படித்திருப்பார். இப்போது ரமேஷ் அதை நன்றாக படித்துவைத்திருக்கிறான் என்று தெரிந்தவுடன் மனசு படபடக்கிறது.

அந்த படபடப்பு படித்திருக்கிற மற்ற விஷயங்களையும் மறக்க வைக்கிறது. காரணம், நான் நன்றாகப் பரீட்சை எழுத வேண்டும் என்பதை விட என் போட்டியாளர் என்னை விட சுமாராகத்தான் எழுத வேண்டும் என்ற எண்ணம் இங்கு மேலோங்கிக் கிடக்கிறது.

தயவுசெய்து பரீட்சைக்க முன்னர் யார் யார் ... என்னென்ன பாடங்களைப் படித்து இருக்கிறீர்கள்? எதைப் படிக்கவில்லை என்று பட்டியல் போடாதீர்கள். அது யாருக்குமே நல்லதல்ல. அடுத்தவர் எவ்வளவு படித்து இருக்கிறார் என்பதைப் பற்றிய யோசனைகளை துறந்து விட்டு, என் உழைப்பிற்கு ஏற்ற வெற்றி எனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தேர்வை எழுதுங்கள்.


இரண்டாவது முக்கியமான விஷயம், பரீட்சை முடிந்த பிறகு, அது குறித்து விவாதிப்பது. இந்த விவாதம் உங்கள் அடுத்த தேர்வைப் பாதிக்கலாம். பரீட்சை முடிந்தவுடன் நண்பர்களிடம் கைக்குலுக்கி விட்டு வீட்டுக்குக் கிழம்புங்கள். 'அவன் சொல்றதப் பாத்தா, 20 மார்க் கேள்விகள் என்னை விட நல்லா எழுதி இருப்பான் போல இருக்கே. எனக்கு மார்க் குறைஞ்சிடுமோ?' என்று கணக்குப் போடாதீர்கள். அது உங்கள் அடுத்த தேர்வுக்கான தயாரிப்பைப் பாதிக்கும், பயமுறுத்தும்.

ஏற்கனவே, இங்கு பரீட்சை என்பது தேவைக்கு அதிகமான பயமுறுத்தல்களோடு தான் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதில் கூடுதலாக அடுத்தவரோடு ஒப்பிட்டு உங்கள் மன அழுத்தத்தை அதிகரித்துக் கொள்ளாதீர்கள். இந்த ஒப்பீட்டு எண்ணம்தான் படிப்பைச் சுமையாக்கி, நிர்ப்பந்தப் போட்டியாக மாற்றி வைத்திருக்கிறது.

இங்கு ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் சிறந்தவர்கள்தான். நீங்கள் உங்கள் பாணியில் திட்டமிட்டபடி படியுங்கள். ஆழமாக கவனித்துப்படிக்க வேண்டிய நேரத்தில், அவர் இதைப் படித்திருப்பாரா என்ற யோசனையை மனதுள் ஓடவிட்டுக் கொண்டிருக்காதீர்கள். நீங்கள் படிப்பதும், நல்ல மார்க் எடுப்பதும்... உங்கள் இலக்குகளையும் ஆசைகளையும் எட்ட முனைவதும் உங்களுக்காகத்தான். உங்கள் வெற்றிக்காகத்தான். யாரையோ தோற்கடிப்பதற்காக அல்ல, உங்கள் வெற்றிக்காக!

இரண்டு பெண் நண்டுகள். நல்ல தோழிகள். ஆனால், இரண்டு பேரில் யார் சிறந்தவர் என்ற மனோபாவம் இருவருக்குமே உண்டு. அதிலொரு நண்டு அழகான, பலமான, திறமையான ஓர் ஆண் நண்டைக் காதலித்து திருமணம் செய்துக் கொண்டது. தன் தோழியை விடச் சிறப்பான ஒருவரைத் தேர்வு செய்து திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்பது இன்னொரு நண்டின் ஆசை.

ஒரு நாள் வித்தியாசமான ஒரு ஆண் நண்டை அது பார்த்தது. எல்லா நண்டுகளும் பக்கவாட்டில் நடந்த போது, இந்த நண்டு மட்டும் நேராக நடந்தது... பெண் நண்டுக்கு மனதுக்குள் பெரிய சந்தோஷம். என் தோழியை விட எனக்கு நல்ல மாப்பிள்ளை கிடைத்துவிட்டார். நேராக நடக்கும் 'நண்டு மாப்பிள்ளை' யாருக்குக் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில், உடனடியாக ஆண் நண்டிடம் போய், 'ஐ லவ் யூ' சொன்னது பெண் நண்டு. ஆண் நண்டும் ஓ.கே. சொல்ல... அடுத்த நாளே கல்யாணம்.

கல்யாணம் முடிந்த மறுநாள் பெண் நண்டு ஓய்வாக உட்கார்ந்திருந்த சமயம், ஆண் நண்டை அழைத்தது. இப்போது புதுமாப்பிள்ளை எல்லா நண்டுகளையும் போலவே பக்கவாட்டில் நடந்து வந்தார். பெண் நண்டிற்கு அதிர்ச்சி. 'இது நேராக நடக்கும் நண்டு. என் ஃப்ரெண்டின் கணவரை விடச் சிறந்தவர் என்று தானே திருமனம் செய்தோம். இப்போது பக்கவாட்டில் நடக்கிறதே' என்று பதட்டம்.

'நான் உங்களை முதலில் பார்த்த போது அழகாக, நேராக நடந்தீர்களே, இப்போது ஏன் பக்கவாட்டில் நடக்கிறீர்கள்?' என்று கோபமாக கேட்டது பெண் நண்டு. ஆண் நண்டு சிரித்துக்கொண்டே சொன்னதாம்... 'அடி பைத்தியக்காரி... அன்னிக்கு நான் தண்ணியடிச்சுட்டு இருந்தேன். அதனால போதையில் அப்படி நடந்தேன். நீ ஆசைப்படுறதுக்காக நான் தினமும் தண்ணியடிச்சிட்டு நேராக நடக்க முடியுமா?'

பெண் நண்டுக்கு பெரிய ஏமாற்றம். தன் தோழியை விடச் சிறப்பான திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால், குடிகார நண்டோடு குடும்பம் நடத்தவேண்டியது ஆயிற்று.

தனக்குரிய சரியான, தகுதியானத் துணையைத் தேடிக் கொள்வதற்கான வாய்ப்பு, அறிவு இரண்டுமே அந்தப் பெண் நண்டுக்கு இருந்தது. ஆனால், தன் தோழியோடு தன்னை ஒப்பிட்டு அவளை மிஞ்ச வேண்டும் என்ற நினைப்பு... பெண் நண்டைச் சுதந்திரமாகவும் இயல்பாகவும் சிந்திக்க விடாமல் தடுத்திருக்கிறது.

இந்தக்கதை நமக்கும் பொருந்தும். யாரையும் முந்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பரீட்சை எழுதாதீர்கள். அது பதற்றத்தையும் அவசரத்துடன் கூடிய நிர்ப்பந்தத்தையும் உருவாக்கும். உங்கள் நண்பனோ, தோழியோ, நன்றாகப் படித்திருந்தால்... அவர்களும் நன்றாகப் பரீட்சை எழுதட்டும்.

நீங்கள் சிறப்பானவர், உழைப்பாளி. இரு வருடமாக இந்தப் பரீட்சைக்காகத் தயாரித்து இருக்கிறீர்கள். உங்கள் உழைப்பிற்கு ஏற்ற பலன் நிச்சயம் கிட்டும். All the best..!

....

No comments