மெல்ல மெல்ல உயிர் குடிக்கும் அலுமினியப் பாத்திரங்கள்..!


தற்போதைய காலகட்டத்தில் அலுமினியப்பாத்திரங்கள் பரந்துபட்ட பாவனையை அடைந்துவிட்டது. மலிவாகக் கிடைப்பதனால், ஏழைகள் பணக்காரர்கள் எனும் வித்தியாசமின்றி அனைவரும் அலுமினியப் பாத்திரங்களை அதிகம் வாங்குகின்றனர்.

உலகில் அதிகம் கிடைக்கும் உலோகங்களில் அலுமினியமும் ஒன்றாகும். அலுமினியத்தை எளிதாக வளைக்கலாம்; நெளிக்கலாம் என்பதனால் இவற்றால் மிக எளிதில் பாத்திரங்களை உருவாக்கலாம். மருந்து அட்டைகள், பொதிப்பக்கற்றுகள், மென்பான கொள்கலன்கள் போன்றவையும் அலுமினியத்தினால் தயாரிக்கப்படுகின்றன. இதுபோன்ற நிறைய விடயங்களில் அலுமினியத்தின் உபயோகம் காணப்படுகிறது.

அலுமினியப் பாத்திரங்களை தயாரிப்பதும், வாங்குவதும் எளிது என்பதால் நாம் அவற்றின் மூலம் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை அறியாமலேயே  அவற்றை பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

அலுமினியதின் பாதகமான விளைவுகள். 

அலுமினியமானது ஓர் ஈரியல்புடையது உலோகம் என்பதனால் அது அமிலம் மற்றும் காரத்தன்மையான உணவுப்பொருட்களுடன்  இரசாயனத்தாக்கம் புரியக்கூடியது. அலுமினியத்துடன் எலுமிச்சைச்சாறு தாக்கமுற்றால் அலுமினியம் சிட்ரேட் (Aluminium Citrate), தயிருடன் தாக்கமுற்றால் அலுமினியம் லக்டேட் (அலுமயும் Lactate), புளியுடன் தக்கமுற்றால் அலுமினியம் டார்டரேட் (Aluminium Tartarate ), தக்காளியுடன் தக்கமுற்றால் அலுமினியம் பாஸ்டரேட (Aluminium Paastarate) என எதனுடன் தாக்கமுறுகின்றதோ அதற்கேற்ப அலுமினியம் உப்பாக மாறி சமைக்கும் உணவிலும் கலந்து விடுகின்றது. அது மட்டுமின்றி உணவில் நாம் இடும் வினாகிரியுடனும் அலுமினியம் தாக்கமுற்று உணவில் கலந்து விடுகின்றது.

மேலே கூறிய தாக்கங்கள் சுயமாகவே நிகழ்ந்தாலும், நாம் சமைப்பதற்காக இவ்வுணவுவகைகளை வெப்பமேற்றும் போது, இத்தாக்கமானது மேலும் உக்கிரமடையும்.

சமைக்கும் போது சிலவேளைகளில் கரண்டியால் அலுமினியப் பாத்திரங்களை சுரண்டும் போது, அவற்றின் மேலேயுள்ள அலுமினியம் ஒட்சைட்டு (Aluminium Oxide) படை சுரண்டலடைந்து தூய அலுமினியம் வெளிக்காட்டப்படும். இதன்போது இவ்விரசாயனத் தாக்கம் மிகவும் இலகுவாக நடைபெறும். இவ்இரசாயனத் தாக்கங்களின் பிரதிபலனாகவே அலுமினியத்தின் அடியில் Aluminium Piting எனப்படும் கருப்புப்புள்ளிகள் தோன்றுகின்றன. இதற்கு ஆதாரமாக – அமிலத்தன்மை , காரத்தன்மை அற்ற நன்னீரை அலுமினியப்பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க வையுங்கள். பிறகு அந்த நீரை கண்ணாடித்தட்டில் ஊற்றி ஆறவிடுங்கள் பிறகு ஒரு நாள் கழித்து பாருங்கள், தண்ணீரில் அலுமினியம் ஒட்சைட் வீழ்படிவு இருப்பதை அவதானிப்பீர்கள். சாதாரண நன்னீருடனேயே இவ்வாறு தாக்கமடைகிறது என்றால் தக்காளி , புளி , எலுமிச்சை , தயிர் , வினாகிரி என்பவற்றுடன் எப்படித்தாக்கமடையும் என்பதனை சிந்தித்துப்பாருங்கள்.

உடலினுள் புகும் அலுமினியத்தை உடலினால் வெளியேற்ற முடியாது. இதனால் அலுமினியமானது உடலினுள் தங்கிவிடும். உடலினுள் 4 மில்லி கிராம் அலுமினியம் தங்கி விட்டாலே போதும், அதுவே உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. உடலினுள் உட்புகும் அலுமினியமானது சிறுநீரகம் , எலும்பு , நரம்புகளை பாதிப்படையச் செய்கின்றது. மூளைக்கலங்களின் வளர்ச்சியை குறையச்செய்வதால், மறதி நோயை ஏற்படுத்துகின்றது. உடலில் அலுமினியம் அளவு அதிகரிக்கும் போது ஊட்டச்சத்து மற்றும் ஒட்சிசன் போதாமை உண்டாகின்றது. இதன் காரணமாக oxidative stress ஏற்பட்டு மூளை வீக்கமடையலாம்.

Teflon Coating போடப்பட்ட அலுமியப்பாத்திரங்களை தான் நாம் உணவு பாத்திரத்தில் ஒட்டாமல் 'Non-Stick' என பயன்படுத்தி வருகின்றோம். அதனையும் கீறல் விழாமலேயே பயன்படுத்துமாறு எச்சரிக்கின்றனர். ஏனெனில் கீறல் விழும்போது அலுமினியம் வெளிக்காட்டப்படும் என்பதனாலேயாகும்.

மேலுள்ள தகவல்களின் அடிப்படையில் அலுமினியம் என்பது சமைப்பதற்கு உகந்த உலோகம் அல்ல என்பது தெளிவாகின்றது.

தற்போதைய அலுமினியம் போன்றே, முன்னைய காலத்தில் வாழ்ந்த 'மாயர்' எனும் இனத்தின் வீழ்ச்சிக்கு அவர்கள் பாதுகாப்பற்ற முறையில் பயன்படுத்திய செப்புப் பாத்திரங்கள் முக்கிய ஒரு காரணமாகக் கருத்தப்படுகிறது.

நம் முன்னோர்கள் சமையல் உபகரணங்களாக மட்பாத்திரங்களை பயன்படுத்தியுள்ளார்கள். மட்பாத்திரங்களில் சமைக்கும் போது உணவின் இயற்கை தன்மை மாறாமல் பேணப்படுகிறது. அதன் சத்துக்களும் பெருமளவில் அழியாது. மேலும் இவற்றில் சமைக்கப்பட்ட உணவு மிக விரைவில் பழுதடைவதும் இல்லை என்பதால் மட்பாத்திரங்கள் மிகச்சிறந்த சமையல் பாத்திரங்கள் எனலாம்.

உலோகப்பாத்திரங்களில் தான் சமைக்க வேண்டும் என்றால் மிகவும் பொருத்தமானது 'எவர்சில்வர்'  என்றே கூற வேண்டும். இரும்பு , மங்கனீஸ் , தகரம் , நிக்கல் , காபன் என்பவற்றின் கலவை தான் எவர்சில்வர். இதனை வெப்பப்படுத்தும் போதும் கூட தீங்கை ஏற்படுத்தாது. அமுக்க அடுப்பில் கூட எவர்சில்வர் இனை பயன்படுத்துவது நல்லது. இதனை பயன்படுத்தும் போதும் கீறல் விழாமல் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இதிலிருந்தும் கூட நிக்கல் உணவில் கலந்து விடலாம்.

எழுதியவர்: 
Asri Althaf
Medical Student
Dalian Medical University

உங்கள் கட்டுரைகளையும், ஆக்கங்களையும் manavarulagm@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.

Previous Post Next Post