Latest Updates

மனித மாமிசம் உண்ணும் இலங்கையின் குள்ள மனிதர்கள் | Nittaewo of Sri Lanka



 இலங்கையில் வாழ்ந்துவந்த, இன்னும் வாழ்ந்து வருவதாக நம்பப்படும் மனித மாமிசம் உண்ணும்  'நிட்டாவா' எனப்படும் குள்ள மனிதர்கள் இன்று பலராலும் பேசப்படும் ஓர் தலைப்பாக மாறியுள்ளனர்.

உண்மையில் இவர்களின் இனம் இன்னும் உயிருடன் வாழ்ந்து வருகிறதா அல்லது இல்லையா என்ற கேள்விக்கு முன்னர் இவர்களைப் பற்றி அறிவியல் என்ன கூறுகின்றது என்பதனைப் பற்றி சற்று பார்ப்போம்.

இலங்கையின் பழங்குடிகள் அல்லது ஆதிவாசிகள் எனக் குறிப்பிடப்படும் போது பெரும்பாலானோரும் ஆதிவாசிகள் எனக் கருதுவது வேடுவர்களையே. எனினும் வேடுவர்களைப் போலவே இலங்கையில் வாழ்ந்து வந்த இன்னுமொரு ஆதிவாசி இனம் தான் இந்த நிட்டாவா எனப்படும் குள்ள மனித இனம். உண்மையில் இவர்கள் குள்ள மனிதர்கள் எனக் குறிப்பிடப்பட்டாலும், இவர்களை மனித இனத்தில் சேர்க்க முடியவில்லை. காரணம், இவர்களின் இயல்புகளுக்கும் மனித இயல்புகளுக்கும் இடையில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. இவர்கள் அதிகளவில் காட்டிலேயே  வசித்து வந்ததால், இவர்களிடம் மிருக இயல்புகளை ஒத்த அரை-மனித இயல்பே காணப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் இவர்களின் தோற்றமானது மனித தோற்றத்திலும் முற்றிலும் வேறுபட்டதாகவே காணப்பட்டது.

வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி, இவர்கள் இலங்கையில் 19 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் வாழ்ந்து வந்ததாகவும், அதன் பின்னர் இவர்களின் இனம் பூமியில் இருந்து முற்றாக அழிந்து போனதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அண்மையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சில சம்பவங்களைத் தொடர்ந்து, இவர்களின் இனம் முற்றாக அழிந்துவிட்டதா அல்லது இவ்வினம் இன்னமும் இலங்கையில் வாழ்ந்து வருகிறதா என்பது பற்றி பெரும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஆரம்ப காலங்களில், நிட்டாவா எனப்படும் இந்த குள்ள மனித இனத்தவர்கள் வேடுவர்களுடன் ஒன்று சேர்த்து வேடுவ இனத்தை ஒட்டியே வாழ்ந்துவந்துள்ளனர். இருந்தபோதிலும், இந்த குள்ள மனித இனத்தின் அழிவுக்கும் வேடுவர்களே முக்கிய காரணமாகவும்  கருதப்படுகின்றனர். இக்குள்ள மனிதர்களின் மனித மாமிசம் உண்ணும் பழக்கமே இவ்வாறு வேடுவர்கள் இவர்களை முற்றாக அழித்தொழித்தற்கான பிரதான காரணமாகக் கருதப்படுகிறது. முன்பு குறிப்பிட்டது போல இக்குள்ள மனிதர்கள் தோற்றத்திலும், இயல்புகளிலும் மனிதர்களை ஒத்திருக்கவில்லை. மனிதனுக்கும் மிருகங்களுக்கும் இடையேயான ஓர் அரை-மனித தன்மையே இவர்களிடம் காணப்பட்டது. 



தோற்றத்தினை பொருத்தமட்டில், இவர்கள் மனித தோற்றத்தை விட குரங்குகளின் தோற்றத்தையே அதிகம் ஒத்திருந்தனர். அடர்ந்த உரோமங்கள் மற்றும் கூறிய நகங்களை கொண்டிருந்த இவர்கள் மனிதர்களைப் போல முதுகை நிமிர்த்தி நடமாடும் ஆற்றல் பெற்றிருந்தனர். அண்ணளவாக 3 அடி உயரத்தைக் இவர்கள் கொண்டிருந்தாலும் ஆண்களைவிட இவர்களின் பெண்கள் உயரம் குறைந்தவர்களாகவே காணப்பட்டனர். அதாவது பெண்கள் அண்ணளவாக 2 அடி உயரத்தினை மட்டுமே கொண்டிருந்தனர். அத்துடன் ஆண்கள், பெண்கள் என இருபாலரும் ஆடைகள் அணியாத நிர்வாண தோற்றத்திலேயே வாழ்த்து வந்துள்ளனர்.

இவர்கள் வேட்டையாடுவதற்காக வேண்டி குறிப்பிடத்தக்களவில் எந்தவொரு ஆயுதத்தையும் பயன்படுத்தவில்லை. இவர்களின் பிரதான உணவுகளாக உடும்பு, ஓணான், மான், மரை மற்றும் காட்டு எருமைகள் என்பன காணப்பட்டாலும், முன்பு கூறியது போல, இவர்கள் மனித மாமிசத்தை விரும்பி உண்ணும் பழக்கத்தினை கொண்டிருந்தனர். காட்டில் தனியாக உலாவித்திரியும் வேடுவர்கள் மற்றும் காட்டில் ஓடி விளையாடும் வேடுவர்களின் குழந்தைகளை கொன்று உண்பதை இவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். பிற்காலத்தில், இக்குள்ள மனிதர்கள் தனியாக நடமாடும் வேடுவப் பெண்களை கடத்திச் சென்று அவர்களை கற்பழித்து, கொலைசெய்து அவர்களின் உடலை உணவாகக்கொள்ள ஆரம்பித்தனர்.

இக்குள்ள மனிதர்கள் சிறு குழுக்களாக வாழ்ந்து வந்துள்ளதுடன், ஒவ்வொரு குழுவிலும் தலைவராக ஒருவர் இருந்துள்ளார். 

1886 இல் ஹியூ நெவில் (Hugh Nevill) எனும் எழுத்தாளர் தனது நூலில் வெளியிட்டிருந்த கருத்தின் படி இந்த குள்ள மனிதர்களின் பிரதான வாசஸ்தலமாக குகைகளும், மரங்களின் மேல் மரக்கிளைகளுக்கு இடையில் அமைக்கப்பட்ட மேடை போன்ற அமைப்புக்களையும் குறிப்பிட்டிருந்தார். இவர்களால் தமிழ் அல்லது சிங்களதில் பேச முடியவில்லை எனவும் இவர்கள் தெலுங்கு போன்ற ஓர் மொழியில் குரல் எழுப்பியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கர்ச்சித்தல் போன்ற ஓர் பாணியில் இவர்களின் குரல் காணப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இக்குள்ள மனிதர்களைப் பற்றி ஆராய்ந்தவர்களின் கருத்துப்படி, இக்குள்ள மனிதர்களால் வேடுவர்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை தொடர்ந்து இவர்களின் இனம் வேடுவர்களால் முற்றாக அழிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இற்றைக்கு சுமார் 150 வருடங்களுக்கு முன்னர் வேடுவர்கள் இவர்கள் அனைவரையும் பிடித்து ஓர் குகையினுள் அடைத்து தொடர்ந்து மூன்று நாட்களாக தீ மூட்டிக் கொளுத்தியதாகவும் சிலர் கூறுகின்றனர்.

இலங்கையில் அம்பாறை எனும் இடத்தில் சில விவசாயிகள் நிட்டாவா எனப்படும் இக்குள்ள மனிதர்களை ஒத்த தோற்றத்தையுடைய சில குள்ள மனிதர்களை நேரில் கண்டதாக தொரிவித்திருந்த போதிலும், இவர்களின் இனம் உயிருடன் இருப்பதற்கான எந்தவொரு உத்தியோகபூர்வ ஆதாரங்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

YouTube Video: மனித மாமிசம் உண்ணும் குள்ள மனிதர்கள்


நிட்டாவா எனப்படும் இக்குள்ள மனிதர்கள் பற்றி நீங்களும் அறிந்திருக்கக்கூடும். இவர்களைப் பற்றி நீங்கள் அறிந்தவற்றை கீழ் comment பகுதியில் எம்முடன் பகிர்ந்துகொள்ளலாம்.

No comments