
கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டிலான கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி இம்முறை அம்பாறையில் இடம்பெறவுள்ளது.
'மலரும் கிழக்கு' எனும் தொனிப்பொருளில் இடம் பெறவுள்ள இந்தக் கண்காட்சி எதிர்வரும் 10 ஆம், 11ஆம் திகதிகளில் அம்பாறையில் நடாத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்
இதற்கு முன்னர் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இந்த கைத்தொழில் மற்றும் வர்த்தகக் கண்காட்சி இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் 2025 ஆம் ஆண்டுக்கான இலக்கினை அடைவதற்கான பயணத்தில் கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பை அதிகரிக்கும் விதத்தில் இந்தக் கண்காட்சியின் உள்ளடக்கங்கள் அமையப் பெற்றுள்ளதாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.
கிழக்கு மாகாணத்தின் உற்பத்திப் பொருட்களின் சந்தை வாய்ப்பினை அதிகரித்தல் வர்த்தக மற்றும் கைத்தொழில் கண்காட்சியின் பிரதான நோக்காக அமைந்துள்ளது. உற்பத்திப் பொருட்களை மாகாண மட்டம், தேசிய மட்டம் மற்றும் சர்வதேச மட்டத்தில் சந்தை வாய்ப்பினை வழங்குவது இந்த கண்காட்சியின் நோக்காகும் என்றும் கிழக்கு முதலமைச்சர் சுட்டிகாட்டியுள்ளார்.
இதனூடாக கிழக்கு மாகாணத்தின் பிரதான உற்பத்திப் பொருட்களுக்கு சிறந்த சந்தைப் பெறுமதியொன்றை ஏற்படுத்த எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Source : அரசாங்க தகவல் திணைக்களம்.