பிள்ளைகளை ஆரோக்கியமான முறையில் பாடசாலைக்கு அனுப்புங்கள்.


விடுமுறையின் பின்னர் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முன், இவற்றையும் சற்று கவனத்தில் கொள்ளுங்கள்.

விடுமுறையின் பின்னர் ஒவ்வொரு பெற்றோரும் உங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் விடயத்தில் பிஸியாக இருப்பீர்கள். பிள்ளைகளுக்கு தேவையான பாடசாலை உபகரணங்களை ஒழுங்குபடுத்துவதில் பிள்ளைகளுடன் சேர்ந்து நீங்களும் மும்முரமாக வேலை செய்துகொண்டிருப்பீர்கள்.

உங்களில் எத்தனை பேர் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் முன்னர் அவர்களது உடல் ஆரோக்கியம் பற்றி கவனத்தில் கொண்டுள்ளீர்கள்?

விடுமுறையின் போது உங்கள் பிள்ளைகள் பல இடங்களுக்கு சென்றிருப்பார்கள், வித்தியாசமான சூழல்களில் அவர்களின் பொழுதுகளை கழித்திருப்பார்கள் மற்றும் பலவகையான உணவுகளை உட்கொண்டிருப்பார்கள். எனவே, விடுமுறையின் பின்னர் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் முன்னர் அவர்களின் உடல் ஆரோக்கியம் பற்றி நீங்கள் சற்று அக்கறை காட்டுவது நல்லது.

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் முன்னர் அவர்களின் உடல் ஆரோக்கியத்தை கவனத்திற்கொள்ள உங்களுக்காக சில ஆலோசனைகள்:

1. பிள்ளளைகளின் பற்கள்.

விடுமுறை காலங்களில் பலவகையான உணவுகளையும் உற்கொள்வதால் பிள்ளைகளின் பற்கள் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ளது. முக்கியமாக, அதிக இனிப்பு, அதிக அமிலத்தன்மை கொண்ட பானங்கள் மற்றும் உணவுகளை உற்கொள்ளும் போது பற்களில் பாதிப்புக்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

சரிவர பல் துலாக்காவிடினும் பற்கள் மற்றும் ஈறுகளில் பாதிப்புக்கள் ஏற்படலாம். மேலும், வாய் துர்நாற்றம் வீசும் நிலைமையும் ஏற்படலாம்.

எனவே, விடுமுறையின் பின்னர், உங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும் முன், உங்கள் பிள்ளைகளின் பற்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துதல் வேண்டும். தேவைப்படின், பல் மருத்துவரை அணுகி, ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளுங்கள்.



2. பார்வை மற்றும் கேட்டல் திறன்.

கல்வி நடவடிக்கைகளுக்கு பார்வை மற்றும் கேட்கும் திறன் மிக முக்கியமானது. இவை பாதிப்படையும் போது, கல்வி நடவாடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்படலாம். சிலவேளைகளில் உங்களை அறியாமலே உங்கள் பிள்ளைகளுக்கு பார்வை குறைபாடுகள் இருக்கவும் வாய்ப்புக்கள் உள்ளன. இது அவர்களின் கல்வி நடவடிக்கைகளை வெகுவாகப் பாதிக்கும்.

பிள்ளைகள் புத்தகங்களை வாசிக்க அல்லது வாசிக்க முடியுமான அளவு பார்வைக்கு எட்டிய தூரத்தில் உள்ள எழுத்துக்களை வாசிக்க சிரமப்படும் போது, அது அவர்களின் வாசிப்புத் திறனில் உள்ள பிரச்சினை என முடிவெடுத்துவிட முடியாது. சிலவேளைகளில் அதற்கான காரணம் அவர்களின் பார்வைக் குறைபாடாகவும் இருக்கலாம். இந்த விடயத்தில் சற்று அவதானமாக இருத்தல் அவசியம்.

பொதுவாக குறும்பார்வை மற்றும் நீள்பர்வை குறைபாடுகள் இருப்பின், கண் வைத்தியரை நாடி, அதற்கான மூக்குக் கண்ணாடிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. போதியளவு தூக்கம்.

உங்கள் பிள்ளைகள் தினந்தோறும் போதியளவு தூங்குகின்றனரா என்பது பற்றியும் அவதானமாக இருங்கள். தினந்தோறும் போதியளவு தூக்கம் இல்லாவிடின், நாள் முழுவதும் சோர்வாக இருப்பார்கள். மேலும்,  அவர்களால் கல்வி நடவடிக்கைகளில் போதியளவு அவதானம் செலுத்த முடியாமல் போகும். அளவுக்கு மிஞ்சிய தூக்கமும் ஆரோக்கியமற்றது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

4. காலணிகள் மற்றும் பாதணிகள்.

உங்கள் குழந்தைகளுக்கான காலணிகள் மற்றும் பாதணிகளை தெரிவுசெய்யும் போது, உடல் ஆரோக்கியத்துக்கு பங்கம் விளைவிக்காதவாறு பாதணிகளையும் காலணிகளையும் தெரிவுசெய்துகொள்ளுங்கள்.

பிள்ளைகள் பருவமடையும் போது அவர்களின் பாதத்தின் எலும்புகளும் வளர்கின்றன. முறையற்ற விதத்தில் பாதணிகளையும் காலணிகளையும் உபயோகப்படுத்தும் போது, பிற்காலத்தில் அவை கால் பாதத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடக்கம் தீராத முதுகு வலி வரை உடல் உபாதைகளுக்கு இட்டுச்செல்லும் வாய்ப்புள்ளது.

5. தடுப்பூசிகள் மற்றும் வயிற்றுப் புழு மருந்துகள்.

பிள்ளைகளை பாடசாலை அனுப்பும் பிஸியில் அவர்களுக்கான  தடுப்பூசிகள் மற்றும் வயிற்றுப் புழு மருந்துகளை மறந்துவிட வேண்டாம். சரியான கால எல்லையில் அவற்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
أحدث أقدم