யார் முட்டாள்? | படிப்பினை கதை.


ஒரு ஊரில் ஓர் அறிஞர் வாழ்ந்து வந்தார். நாட்டில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அரசர் அந்த அறிஞரை அழைத்து உபதேசம் கேட்பது வழக்கம். இதனால் அறிஞரின் புகழ் அண்டைய நாடுகளுக்கும் பரவியது. அங்கே உள்ள அரசர்களும் தமது நாட்டில் பிரச்சினைகள் ஏற்படும் போது இந்த அறிஞரை அழைக்கத் தொடங்கினர்.

ஆனால், இது அந்த ஊரில் வாழ்ந்துவந்த ஒரு செல்வந்தனுக்கு இது பிடிக்கவில்லை.  இவ்வளவு செல்வ செழிப்புடன் வாழும் என்னை அரசன் ஒரு போதும் அழைத்ததில்லை, ஆனால் இந்த பரதேசி அறிஞன் மட்டும் வெளிநாட்டு அரசவைக்கெல்லாம் சென்று வருகிறான் என மனதுக்குள் திட்டிக்கொண்டிருந்தான்.

ஒரு நாள் அந்த ஊரில் ஒரு பெரிய ஊர் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.  சந்தர்ப்பம் பார்த்திருந்த செல்வந்தன், கூட்டமாக மக்கள் சேர்ந்து இருக்கும் ஒரு இடத்தில் வைத்து அறிஞரிடம், நீ பெரிய அறிஞனாக இருக்கிறாய், வெளிநாட்டுக்களுக்கெல்லாம் சென்று வருகிறாய், ஆனால் நீ பெற்ற உன் மகனோ ஒண்ணுக்கும் உதவாத அடி முட்டாளாக இருக்கிறான் என கேலியாக சிரித்தான். அதற்கு அறிஞர், அவன் முட்டாள் என்று நீங்கள் கூறுவதற்கான காரணம் என்னவென்று கேட்டார். அதற்கு அந்த செல்வந்தன், நான் உங்கள் மகனிடம் ஒரு தங்க நாணயத்தையும் ஒரு வெள்ளி நாணயத்தையும் நீட்டி, உனக்கு இதில் வேண்டிய ஒன்றை எடுத்துக்கொள் என கூறியதும் உனது மகன், அதுவும் பெரிய புகழ் பூத்த அறிஞரின் மகன், வெள்ளி நாணயத்தை எடுத்துக்கொள்கிறான் என்று மீண்டும் கேலியாக சிரித்தான்.

இந்த சம்பவம் அறிஞரின் மனதை மிகவும் காயப்படுத்தியது. வீட்டுக்கு வந்ததும் மகனை அழைத்து அந்த செல்வந்தன் கூறியவற்றை மகனிடம் கூறி, நீ ஏன் தங்க நாணயத்துக்கு பதிலாக வெள்ளி நாணயத்தை எடுத்துக்கொண்டாய் என கோபமாக கேட்டார். அதற்கு மகன் அமைதியாக பதில் கூறினான்.

அப்பா... அந்த செல்வந்தர் தனது வாகனத்தில் உட்கார்ந்து தனது நண்பர்களுடன் சேர்ந்து பாதையில் செல்லும் யாரையாவது பார்த்து ஏளனமாக பேசி சிரிப்பார். இதை நான் நான் பாடசாலை செல்லும் வழியில் பல முறை அவதானித்திருக்கிறேன். ஒரு நாள் என்னையும் அழைத்து ஒரு தங்க நாணயத்தையும், வெள்ளி நாணயத்தையும் நீட்டி உனக்கு எது வேண்டும் என கேட்டார். அதற்கு நான் வெள்ளி நாணயம் வேண்டும் என எடுத்துக்கொண்டேன். பிறகு நண்பர்களுடன் என்னை பார்த்து ஏளனமாக சிரித்தார். இதை அவர் அடிக்கடி செய்து வருகிறார் நானும் ஒவ்வொரு முறையும் வெள்ளி நாணயத்தை எடுத்துக்கொள்வேன். பிறகு அவர் வழமை போல நண்பர்களுடன் சேர்ந்து சிரிப்பார். ஒருவேளை நான் தங்க நாணயத்தை எடுத்திருந்தால் அன்றிலிருந்து அவர் எனக்கு ஒரு நாணயமும் தரமாட்டார். அவர் என்னை முட்டாள் என நம்பி தினமும் ஒரு வெள்ளி நாணயத்தை தந்துகொண்டு இருக்கிறார் என்றார்.

அறிஞர் தனது மகனை பார்த்து, அப்படியென்றால் இவ்வளவு நாளும் நீ வாங்கிவந்த வெள்ளி நாணயங்கள் எங்கே என்று கேட்டார். அதற்கு அறிஞரின் மகன், நான் ஒவ்வொரு முறையும் பாடசாலை விட்டு வரும் வழியில் அந்த வெள்ளி நாணயத்தை யாராவது ஏழைகளுக்கு கொடுத்துவிடுவேன் அல்லது வழியில் யாராவது பிச்சரைக்காரனை கண்டால் உடனே கொடுத்துவிடுவேன். செல்வந்தரும் அவரது நண்பர்களும் வேண்டுமானால் என்னை முட்டாள் என்று நினைத்துவிட்டு போகட்டும், ஆனால் அந்த வெள்ளி நாணயம் தினமும் ஒருவருக்கு உதுவுகிறது. அவரின் இந்த வேடிக்கையான செயல் யாரோ ஒருவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது என்றான். அறிஞனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. உடனே மகனை கட்டித்தழுவிக்கொண்டார்.

இப்படித்தான், வாழ்க்கையில் நீங்கள் மற்றவர்களுக்கு செய்யும் சில நல்ல காரியங்களை பார்த்து உங்களை யார்வேண்டுமானாலும் முட்டாள் என்று கூறலாம். உங்களை கிண்டலடித்து கேலியாக சிரிக்கலாம். ஆனால் நீங்கள் மற்றவர்களுக்கு செய்யும் நல்ல காரியங்களை ஒருபோதும் கைவிட்டுவிடாதீர்கள். இறைவனும் உங்களை கைவிடமாட்டார்.
أحدث أقدم