நல்ல பெறுபேறுகளை பெற முடியாமல் போன மாணவர்களுக்கு...2019 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் பரீட்சைக்கு அமர்ந்த பரீட்சாத்திகள் அனைவருக்கும் தமது முயற்சிக்கு ஏற்ப எதாவது ஒரு பெறுபேறு கட்டாயம் கிடைக்கப்பெற்றிருக்கும். சிலர் பரீட்சையில் சித்தியடைவதற்காக வேண்டி எவ்வளவு தான் சிரமப்பட்டு படித்திருந்தாலும், அவர்களுக்கு தாங்களால் எதிர்பார்த்த பெறுபேற்றை பெற முடியாமல் போயிருக்கும்.

நல்ல பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை, எதிர்பார்த்தளவிற்கு பெறுபேறுகளை பெற முடியாமல் போன மாணவர்கள் ஏதோ ஒருவகையில் மனதளவினாலேனும் சங்கடத்துக்குள்ளாகியிருப்பார்கள். சிலவேளை பெற்றோர்கள் பிள்ளைகளையும், பிள்ளைகள் இறைவனையும் கேள்வி கேட்டுக்கொண்டிருப்பார்கள்.

குத்துச்சண்ட வீரன் ஒருவன் அடிபட்டு முதல் இரண்டு அடியில் தோல்வியுற்று கீழே விழுந்து, மீண்டும் எழுந்து சண்டையிட்டு வெற்றிபெறுகிறான். அவன் கீழே விழுந்தபோது மீண்டும் எழுந்திருக்க வேண்டும் என்று நினைக்கும் போதே அவன் வெற்றிபெற்றுவிட்டான்.

இதுதான் உங்கள் வாழ்வின் இறுதி சந்தர்ப்பம், இதையும் தவறவிட்டுவிட்டோமே என நீங்கள் உறுதியாக நம்பினால், ஆம் உங்களால் எதுவுமே முடியாது.

இல்லை, இது உங்கள் வாழ்வில் கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பம் என அறிந்தும் இதை உங்களால் சரிவர பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை,  அல்லது நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தும் நீங்கள் எதிர்பார்த்த பெறுபேற்றை பெற உங்களால் முடியவில்லை. நான் மீண்டும் முயற்சி செய்வேன், அல்லது நான் நினைத்த இலக்கை எப்படியேனும் அடைந்தே தீருவேன், என்னால் முடியும் என நீங்கள் நம்பினால், ஆம் உங்களால் முடியும்.

இப்போது, நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், நீங்கள் தோல்வியடைந்திருப்பின் தோல்வியை ஏற்றுக்கொள்வது தான். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வி மட்டுமே உங்களுக்கு உரித்தாகும் என எண்ணாதீர்கள்!  நீங்கள் முயற்சி செய்தால் உங்களால் மீண்டும் வெற்றி இலக்கை அடைய முடியும். அதற்காக வேண்டி இன்றே உங்களை தயார்செய்யுங்கள்.

மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றி சிந்திக்காதீர்கள். இன்று உங்களை இகழ்ந்து கதைப்பவர்கள் எல்லாம் நீங்கள் நாளை வெற்றியடைந்ததும், உங்கள் வெற்றியில் பங்குகொள்ள முந்தியடித்துக்கொண்டு வருவார்கள். இது தான் இன்றைய உலகம். இது தான் உண்மை. வீண் வாய்ப் பேச்சுக்களுக்காக உங்கள் வாழ்க்கையையும் உங்கள் இலக்குகளையும் ஒரு நொடியில் மாற்றிக்கொள்ளாதீர்கள்.

"நீங்கள் பயணிக்கும் பாதையை வேண்டுமானால் மாற்றியமைத்துக்கொள்ளுங்கள், எனினும் நீங்கள் பயணிக்கும் இலக்கை மாற்றிக்கொள்ளாதீர்கள்!"

மனம் தளரவிடாதீர்கள்..!

சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் அதேநேரம், நல்ல பெறுபேறுகளை பெற முடியாமால் போன மாணவர்களுக்கு, என்னால் முடிந்த ஆறுதல் வார்த்தைகள்...

- மாணவர் உலகம்

Previous Post Next Post