ஆங்கிலம் பேசுவதில் தயக்கம் உள்ளதா? | ஆங்கிலத்தில் பேசுவோம் | Let's speak English


அடிப்படையில் இருந்து ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்கள் ஆங்கிலத்தில் கதைக்க பயிற்சி எடுத்தே ஆக வேண்டும். எந்தளவுக்கு பயிச்சி செய்கிறோமோ, அந்தளவிற்கு உங்களால் பேச முடிகிறது. 

சிலருக்கு ஆங்கிலம் பேசுவதில் சற்று தயக்கம் இருக்கலாம். காரணம் ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழி என்பதாலும், அதை தவறாக கதைக்கும் போது மற்றவர்கள் தம்மை ஏளனமாக நினைப்பார்கள் என்பதுவும் ஆகும். ஆங்கிலம் பேசுவதற்கு நீங்கள் காட்டும் தயக்கம் நீங்கள் வசிக்கும் நாட்டிலுள்ள வேறொரு மொழியை பேசுவதில் இருக்காது. ஆங்கிலத்தை ஒரு இரண்டாம் மொழியாக மட்டும் நினைத்த்து பேசத் துவங்கினால் கட்டாயம் உங்களால் நன்றாக ஆங்கிலத்தில் பேச முடியும். 

ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி உள்ள எவரும் உங்களை ஏளனம் செய்யமாட்டார்கள், மாறாக நீங்கள் ஆங்கிலத்தில் கதைக்க முயற்சிப்பதை மேலும் உற்சாகப்படுத்துவார்கள். இதனை மனதில் நிறுத்தி உங்களால் இயன்றவாறு நீங்கள் ஆங்கிலத்தில் பேச ஆரம்பிக்கலாம்.


ஆங்கிலத்தில் கதைக்க ஆர்வமுடையவர்களுக்கு 'ஆங்கிலத்தில் பேசுவோம்' எனும் பகுதி ஊடாக ஆங்கிலத்தில் கதைக்க உதவும் வாக்கியங்களை அவற்றின் தமிழ் கருத்துடன் தொகுத்து வழங்கி வருகிறோம்.

சிலவேளைகளில் ஓர் ஆங்கில வாக்கியத்தின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு தமிழ் பேச்சு வழக்கில் இல்லாமலும் இருக்கலாம். அதேபோன்று தமிழ் பேச்சு வழக்கில் உள்ள வாக்கியங்களில் நேரடி ஆங்கில மொழிபெயர்ப்பும் ஆங்கில பேச்சு வழக்கில் இல்லாமல் இருக்கும். 

இங்கே எமது முயற்சியானது ஆங்கிலத்தில் பேச ஆர்வமுடையவர்களுக்கு ஆங்கில வாக்கியங்களுக்கு தகுந்த தமிழ் பேச்சு வழக்கில் உள்ள வாக்கியங்களை முடிந்தவரையில் ஆங்கில இலக்கணமும் உடன்படக்கூடிய முறையில் தொகுத்து வழங்குவதாகும்.

ஆங்கிலத்தில் உள்ள வாக்கியங்களில் இடம்பெறும் சொற்களின் உச்சரிப்பும் அவ்வாக்கியங்களுடன் தரப்படுகின்றன. இவ்வுச்சரிப்புக்கள் சிலவேளைகளில் நீங்கள் வசிக்கும் நாட்டினை பொருத்து சற்று வித்தியாசப்படவும் செய்யலாம். ஐக்கிய அமெரிக்காவில் ஆங்கிலத்தை உச்சரிக்கும் விதத்திலும் பிரித்தானியா உட்பட ஏனைய ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலத்தை உச்சரிக்கும் விதத்திலும் வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. இதேபோன்று தான் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் மத்திய கிழக்கு போன்ற ஆசிய நாடுகள் மற்றும் ஆவுஸ்திரேலியாவில் ஆங்கிலத்தை உச்சரிக்கும் விதத்திலும் சற்று வித்தியாசம் இருக்கவே செய்கிறது.

எனினும் இதில் எதுவும் நீங்கள் ஆங்கிலம் கற்பதற்கும், ஆங்கிலத்தில் கதைப்பதற்கும் ஒருபோதும் தடையாக அமையப்போவதில்லை.
Previous Post Next Post