23 நாய்கள் கொலை (VIDEO) : விலங்கு ஆர்வலர்கள் கண்டனம்


மொரட்டுவை பல்கலைக்கழக வளாகத்துக்குள், 23 தெரு நாய்களுக்கு நஞ்சு கொடுத்து கொன்றமை தொடர்பான காணொளி வெளியாகியுள்ள நிலையில், விலங்கு ஆர்வல்கள் இது குறித்துக் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.   

மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்களே  சனிக்கிழமை (15) இந்தக் காணொளியை வெளியிட்டுள்ளதோடு, இதற்குக் கண்டனம் தெரிவித்து, ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.   

மொரட்டுவை பல்கலைக்கழக அதிகாரிகளும் வேறு சிலரும் சேர்ந்து, நாய்களுக்கு அதிக போதை அடங்கிய மருந்துகளைக் கொடுத்து, சித்திரவதை செய்து​ கொல்லுவதாக அமைந்துள்ள அந்தக் காணொளி, வெளியிடப்பட்ட பின்னர், அதை அகற்றுமாறு அழுத்தங்கள் ஏற்பட்டதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.   

இது தொடர்பாக, மொரட்டுவை மாநகர சபை மருத்துவ அதிகாரி ஜயவர்தன மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழக அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முயற்சித்த போதும், அது பயனளிக்கவில்லை.  

எனினும், இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள விலங்கு ஆர்வலர் ​ஒட்டாரா குணவர்த்தன, விலங்குகளைப் பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் முறை ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறினார்.  

"அனைத்து நாய்களுக்கும், இருப்பதற்கும் உறங்குவதற்கும், உண்ணுவதற்கும், அன்பு காண்பிப்பதற்கும் என்று தேவை உண்டு. விலங்குகளை ஆதரிக்காத பலர் இருக்கும்போது, விலங்குகளை ஆதரிக்கும் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.

ஆனால், அனைவருக்கும் வாழும் சுதந்திரமும் சுதந்திரமாக இருக்கும் சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கொடூரமான சம்பவங்களை அரங்கேற்றவேண்டிய கட்டாயம் என்ன?" என்று அவர் கேள்வியெழுப்பினார்.   

மேலும், இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த விலங்கு ஆர்வலர், சட்டதரணி லலனி பெரேரா, "தெரு நாய்களைக் கொல்லும் கொள்கை இனி இல்லை என்று, கடந்த 2006ஆம் ஆண்டு, முன்னாள் ஜனாதிபதி ​மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.

அப்படியிருக்கையில், நாய்களைக் கொன்ற சம்பவத்துக்கு நாம் கண்டனம் தெரிவிக்கின்றோம். இதற்கு, சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையே நாம் எதிர்பார்க்கின்றோம். முன்னாள் ஜனாதிபதியிடமிருந்த கொள்கையை தற்போதும் நடைமுறைப்படுத்துமாறே நாம் கோருகின்றோம்" என்று அவர் தெரிவித்தார்.  

இந்தச் சம்பவத்துக்கு, பல விலங்கு ஆர்வலர்கள் குழு, சமூக ஆர்வலர்கள், மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

Source: Tamilmirror.lk

VIDEO:


Previous Post Next Post