உண்மையில் இறைவன் என்றொரு சக்தி உள்ளதா? | Tamil Motivational Storiesபுதிதாக நகர்புறம் வந்த ஒரு விவசாயி முடி வெட்டுவதற்காக சலூன் கடையை தேடிச் செல்கிரரர். சலூன் கடை இருக்கும் இடத்தை கேட்டுத் தெரிந்துகொண்டு அவ்விடத்தை வந்தடைகிறார்.  விவசாயியை உள்ளே வரவேற்ற சலூன் கடைக்காரர் அவர் கூறிய படி அவரது முடியை வெட்ட துவங்குகிரார்.

முடிவெட்டும் போது இடையில் எதாவது பேச்சுக் கொடுக்கலாம் என விவசாயியுடன் பேச துவங்குகிறார் முடிவெட்டும் சலூன் கடைக்காரர். "ஐய்யா நீங்கள் எந்த ஊர், என்ன வேலை செய்கிறீர்கள்" என்று முடிவெட்டிக்கொண்டே அவர் பேச்சை ஆரம்பிக்கிறார். அந்த விவசாயியும் தன் ஊர் பெயரை கூறி, தான் ஒரு விவசாயி என தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார். அதிலிருந்து இருவவரும் பேச்சை தொடர்கின்றனர்.

ஓரிடத்தில் சலூன் கடைகாரர் அந்த விவசாயியின் விளைச்சல் பற்றியும் அதிலிருந்து வரும் வருமானம் பற்றியும் கேட்கிறார். அதற்கு அந்த விவசாயி, "இறைவன் புண்ணியத்தில் எங்கள் ஊரில் எனக்குத் தான் அதிகமாக விளைச்சல் கிடைக்குது, அதிலிருந்து போதிய வருமானமும் கிடைக்குது, நம்ம கையில் என்ன இருக்கு எல்லாம் அந்த ஆண்டவன் புண்ணியத்துல தான் நடக்குது" என்றார். அதற்கு சலூன் கடைக்காரர் "உழைப்பு உங்களது, ஆனால் புகழ் எல்லாம் ஆண்டவனுக்கா" என்று வேடிக்கையாக கேட்டார். 

"ஏன்பா அப்படி பேசுகிறாய்? ஆண்டவன் உதவி இல்லாமலா எல்லாம் நடக்குது? அப்படி எல்லாம் பேசக் கூடாது" என்று விவசாயி சலூன் கடைகாரரிடம் கூற, அதற்கு சலூன் கடைக்காரர் "ஐய்யா, எனக்கு கடவுள் மேல எல்லாம் பெரிசா நம்பிக்கை கிடையாது , எனது வாழ்கையை நான் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று சொல்ல இருவரும் இதை தலைப்பாக எடுத்துக்கொண்டு பேச்சை தொடர்கின்றனர். 

பேச்சின் உச்சத்தில் சலூன் கடைக்காரர், "கடவுள் இருக்காரு என்று சொல்றீங்களே, வெளியே கொஞ்சம் எட்டிப்பாருங்கள், எங்கள் நகரத்தில் மட்டும் எத்தனை பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள், எத்தனை குழந்தைகள் சாப்பட்டுக்கே வழி இன்றி பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கு? இதே நகரத்தில் பெரிய பணக்காரர்களும் இருக்கிறார்கள், பரம ஏழைகளும் இருக்கிறார்கள். ஏன் உங்கள் ஊரிலும் நிலமை இதுவாகத் தான் இருக்கும். உங்களை போல் ஓரிரு விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலும் வருமானமும் இருக்கும், ஆனால் அதிகமானவர்களுக்கு நல்ல விளைச்சலும் இல்லை வருமானமும் இல்லை. ஏன் இந்த ஏற்ற தாழ்வு? அது மட்டுமா ஐய்யா, எத்தனையோ பேர் கை, கால், பார்வை இன்றி வாய் பேச முடியாமல் இந்த உலகத்தில் பிறந்து எவ்வளவவு கஷ்டமான வாழ்க்கை வாழ்கிறார்கள். நீங்கள் கூறுவது போல் கடவுள் அல்லது இறைவான் என்று ஒரு சக்தி இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா." என்று ஒரே மூச்சில் தனது கருத்தை சொல்லி முடிக்கிறார். 

விவசாயியோ எதுவும் பேசாமல் மௌனமாக கேட்டுகொண்டிருந்தார். முடிவெட்டுவதும் நிறைவுக்கு வந்தது. 

முடிவெட்டி முடிந்ததும் விவசாயிடம் இருந்து முடிவெட்டியதற்கான பணத்தை வாங்கி, அதில் மீதியை திருப்பிக் கொடுக்கும் போது சலூன் கடைக்காரர் விவசாயியை பார்த்து "ஐய்யா, நான் சொன்னத மனசுல வெச்சிக்கிட்டு என்கிட்ட திருப்பியும் முடிவெட்ட வராமல் இருந்திட வேண்டாம், ஏதோ என்னோட மனசுல பட்டதை நான் சொன்னேன், அவ்வளவு தான்" என்றார். விவசாயியும் சிரித்துகொண்டே மீதிப் பணத்தை பெற்றுக்கொண்டு சலூன் கடையை விட்டு வெளியேறினார்.

வெளியே சென்ற விவசாயி சில வினாடிகளில் மீண்டும் சலூன் கடைக்கு வந்தார். சலூன் கடைக்காரரை வெளியே அழைத்து, "இங்க வந்து பாருப்பா, அதோ அந்த தெருவோரத்துல இருக்கிற பிச்சைக்காரனை கொஞ்சம் பாரு, அசிங்கமாக வளர்ந்து நிறைந்துள்ள அவனோட தலை முடியை பாரு, நான் சொல்றேன் இந்த உலகத்தில் சலூன் கடைகளும் இல்லை, முடி வெட்டுகின்றவர்கள் என்று யாரும் இல்லை. அப்படி இருந்திருந்தால் அவனோட முடி இப்படி கேவலமா வளர்ந்திருக்குமா" என்றார்.

அதற்கு சலூன் கடைகாரர், "ஐய்யா, நான் எதோ கடவுள் இல்லன்னு சொன்னதுக்கு திரும்பி வந்து இப்படி சொல்லாதீர்கள். அவன் தினமும் அங்கே தான் பிச்சை எடுக்கிறான், ஒரு நாளாவது என்னிடம் வந்ததேயில்லை, என்னிடம் வந்திருந்தால் நான் இலவசமாக வேண்டுமானாலும் அவனுக்கு  முடி வெட்டியிருப்பேன். ஆனால் அவன் என்னோட கடைப் பக்கமே வருவதில்லை" என்றார்.

இதைக் கேட்ட விவசாயி "சரியாகச் சொன்னாய், இறைவனும் அப்படித் தான்" என்று புன்னகையுடன் கூறிச் சென்றார்.
Previous Post Next Post