கனடாவில் வெளிநாட்டவர்களுக்கான தொழில்வாய்ப்பு மற்றும் நிரந்தர குடியுரிமை | Job Opportunities & PR in Canada


பல்வேறு இணையதளங்கள், வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொண்டவர்கள் என பல ஆய்வுகளின் பின்னரே இந்தக் கட்டுரையை முன்வைக்கிறேன். இந்தக் கட்டுரையை முழுமையாக வாசித்ததன் பின்னர் மட்டும் இது ஒரு சாத்தியமான விடயமா, இல்லையா என்ற முடிவுக்கு வாருங்கள். யாரும் சொல்வதை வைத்து இது சாத்தியமற்றது என்ற முடிவுக்கு வர வேண்டாம்.

(Copyrighted content - manavarulagam.net)

இதுவரையில் இந்த முறையை பயன்படுத்தி ஆசிய, ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பலரும் கனடாவுக்கு வேலைவாய்ப்புகளுக்காகச் சென்றுள்ளனர். இது சிரமமான ஒரு காரியமா என்று கேட்டால், இதற்கு முன்னைய காலங்களில் அமெரிக்கா, கனடா அல்லது  ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து தொழிலுக்காக செல்வது என்பது மிகவும் சிரமமான ஒரு காரியமாகவே இருந்து வந்தது.

ஆனால், உலகளாவிய கொரோனா பிரச்சினையை தொடர்ந்து தொழில்துறையில் ஏற்பட்ட பாரிய சிக்கல்களுக்கு ஏனைய நாடுகளைப் போலவே கனடாவும் முகம்கொடுக்க நேரிட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட ஊழியர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்துகொள்வதற்காக வேண்டி கனேடிய அரசாங்கத்தினால் வேலைவாய்ப்புகள் தொடர்பாக இதுவரையில் இருந்த சட்டதிட்டங்களில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, கனேடிய நிறுவனங்களுக்கு தங்கள் நிறுவனங்களில் வேலை செய்வதற்காக வெளிநாட்டவர்களை பணியமர்த்திக்கொள்ள  சில நிபந்தனைகளின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

LMIA - சான்றிதழ்

இதில் கனேடிய நிறுவனங்களுக்கு இருந்த மிகப் பெரும் சவால் தான் தொழிலாளர் சந்தை தாக்க மதிப்பீடு - Labour Market Impact Assessment (LMIA) எனப்படும் சான்றிதழைப் பெற்றுக்கொள்வது. இந்த சான்றிதழ் மூலம் கனடாவில் உள்ள நிறுவனங்கள் தங்கள் நிறுவங்களின் வேலைசெய்வதற்காக கனடா நாட்டில் போதிய பணியாளர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த சான்றிதழைப் பெற்ற நிறுவனங்களுக்கு மட்டுமே வெளிநாடுகளில் இருந்து வேலைக்காக தொழிலாளர்களை பணியமர்த்த அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்குகிறது. 

எனினும், நான் மேலே குறிப்பிட்டது போன்று கொரோனா பிரச்சினையைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடியான சூழலில் இந்த LMIA சான்றிதழ் தற்போது கனடாவில் பல நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாகாணங்களில், சில தொழில்துறைகளில் ஏற்பட்டுள்ள மிக நெருக்கடியான நிலையைக் கருத்திற்கொண்டு இந்த LMIA சான்றிதழ் பெறாத சில நிறுவங்களுக்கும் வெளிநாடுகளில் இருந்து வேலைக்காக தொழிலாளர்களை பணியமர்த்த விஷேட சலுகை வழங்கப்பட்டுள்ளது. 

Temporary Foreign Worker Program - 2022

கனடாவில் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதற்கும், தொழிவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கும் பல்வேறு நிகச்சித்திட்டங்கள் (Programs) அந்நாட்டு அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் முக்கியமான ஒரு நிகழ்ச்சித்திட்டம் தான் Temporary Foreign Worker Program எனப்படும் தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டம். இங்கே 'தற்காலிகம்' என்பதை ஓரிரு மாதங்கள் எனக் கணிப்பிட வேண்டாம். இங்கே 'தற்காலிகம்' எனப்படுவது குறைந்தது ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்துவதை குறிக்கும். 

அப்படியென்றால் ஓரிரு வருடங்கள் மட்டுமா வேலை என்று கேட்டால், இல்லை இந்தத் தாற்காலிகத் திட்டத்தைப் பயன்படுத்தி நீங்கள் வேலைவாய்ப்பிற்காக கனடாவினுள் நுழைந்துவிட்டால், அங்கே வேலை செய்துகொண்டே இது போன்ற வேறொரு நிகழ்ச்சித்திட்டத்தைப் (Program) பயன்படுத்தி உங்களால் குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும். முன்னர் குறிப்பிட்டது போன்று கனடாவில் வேலைவாய்ப்புக்காகவும், குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதற்காகவும் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் உள்ளன. இது தவிர, கனடாவில் உள்ள ஒவ்வொரு மாகாணங்களுக்கும் (Provinces) தனித்துவமான சில விஷேட நிகழ்ச்சித்திட்டங்களும் உள்ளன. இதில் எதாவது ஒன்றின் மூலம் கட்டாயம் உங்களால் நிரந்தர குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும். 

ஆகவே இந்தத் தற்காலிக திட்டத்தை நீங்கள் கனடாவினுள் நுழைவதற்காகவும், அங்கே ஓரிரு வருடங்கள் தொழில் செய்யும் அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவுமே பயன்படுத்தப்போகிறீர்கள்.

இந்த முறை சட்ட வரையறைகளுக்கு உட்பட்டதா?

இந்த முறை மூலம் நீங்கள் முற்று முழுதாக சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு, சட்டரீதியான முறையில் தொழில் நிமித்தமே கணடவுக்கு செல்கிறீர்கள். வேறு முறைகளைப் போன்று அதிகளவு பணமும் செலவிட வேண்டிய தேவையும் ஏற்படப்போவதில்லை. 


சரி, எப்படி இந்தத் தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டம் (Temporary Foreign Worker Program 2022) மூலம் வேலைவாய்ப்புக்காக விண்ணப்பிக்க முடியும்? 

இதற்கு கனேடிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான தொழில் வங்கி (Canada Job Bank) இணைதளத்தின் மூலம் விண்ணப்பிப்பதே ஏற்றுக்கொள்ளப்பட்டதும், நம்பகமானதுமான வழிமுறையாகும். 


இங்கே சுத்தம் செய்யும் ஊழியர்கள் (Cleaners), பண்ணைத் தொழிலாளர்கள் (Farm Workers) முதல் மருத்துவம், தொழில்நுட்பம், வங்கித்துறை, வியாபாரம் என பல துறைகளிலும் தொழில் வாய்ப்புக்கள் உள்ளன. அதே போன்று அவற்றுக்கான போட்டியும் அதிகமாவே உள்ளது. ஆகவே உங்கள் தகைமைக்கு தகுந்த ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கும் போது சரியான முறையில் விண்ணப்பிப்பது மிக முக்கியமானதாகும். அதுமட்டுமின்றி கனடா நாட்டுக்கு ஏதுவான முறையில் உங்கள் CV மற்றும் விண்ணப்பம் தயார்செய்யப்படல் வேண்டும். 
(CV / Bio Data, விண்ணப்பம் தயார்செய்தல் மற்றும் Canada Job Bank மூலம் விண்ணப்பித்தல் பற்றிய விரிவான ஒரு கட்டுரையை முடிந்தவரை விரைவில் மாணவர் உலகம் இணையதளத்தில் பதிவிடுகிறேன்.)

விண்ணப்பிக்க முன்னர் Canada Job Bank இணையதளத்தில் Employment groups எனும் பகுதியில் Temporary foreign workers எனும் பகுதியை கீழே படத்தில் கட்டப்பட்டுள்ளவாறு 'டிக்' செய்துகொள்ளுங்கள்.


இங்கே ஒரு வேலைவாய்ப்புக்கு மட்டும் விண்ணப்பிப்பதுடன் நிறுத்திக்கொள்ள வேண்டாம், உங்கள் தகைமைக்கு உட்பட்ட அணைத்து வேலைவாய்ப்புகளுக்கும் விண்ணப்பியுங்கள். இதனால் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய வாய்ப்புகளும் அதிகமாகும். விண்ணப்பிக்கும் போது முடிந்தவரை Canada Job Bank இணையதளத்தினால் பதிவேற்றப்பட்ட தொழில்வாய்ப்புகளுக்கே அதிகாகமாக விண்ணப்பியுங்கள். 

Canada Job Bank இணையதளத்தினால் பதிவேற்றப்பட்ட வேலைவாய்ப்பு விபரங்களின் கீழ் நீங்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கிய இரண்டு விடயங்கள் உள்ளன.

1. வெளிநாட்டவர்களால் விண்ணப்பிக்க முடியாத வேலைவாய்ப்புகள்.


இவ்வாறான வேலைவாய்ப்புகளுக்கு கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் தொழில் செய்ய அனுமதி பெற்றவர்களால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆகவே இவ்வாறான வேலைவாய்ப்புகளுக்கு உங்களால் விண்ணப்பிக்க முடியாது.

இங்கே Temporary foreign workers பகுதியில், அதாவது தற்காலிக வெளிநாட்டு பணியாளர் பகுதியில் ஏன் குடியுரிமை பெற்றவர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகிறது என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். இது கனடாவில் தற்போது வசிக்கும் குடியுரிமை பெற்ற மற்றும் தொழில் செய்யும் அனுமதியைப் பெற்ற வெளிநாட்டவர்களைக் குறிக்கும். அத்துடன் இந்த வேலைவாய்ப்புக்கள் கனேடிய மக்களுக்கும் செல்லுபடியாகும்.

2. வெளிநாட்டவர்களால் விண்ணப்பிக்க முடியுமான வேலைவாய்ப்புகள்.


இவ்வாறான வேலைவாய்ப்புகளுக்கு,
  • கனடாவில் குடியுரிமை பெற்றவர்கள், தொழில் செய்ய அனுமதி பெற்றவர்கள்.
  • குடியுரிமை அற்றவர்கள் (வெளிநாட்டவர்கள்), தொழில் செய்ய அனுமதி பெறாதவர்கள். 
என இரு தரப்பினரும் விண்ணப்பிக்க முடியும். ஆகவே இவ்வாறான வேலைவாய்ப்புகளுக்கு உங்களால் விண்ணப்பிக்க முடியும்.

இங்கேயும் இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டுமா என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்பட்டால், இல்லை இங்கே ஒரு நிபந்தனை மட்டும் பூர்த்தி செய்யப்பட்டிருத்தல் போதுமானதாகும்.

LinkedIn கணக்கு

நீங்கள் ஏதாவது ஒரு தொழில்துறையில் தேர்ச்சிபெற்றவர் என்றால் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக விண்ணப்பிக்கும் போது LinkedIn வலைதளத்தில் ஒரு கணக்கை வைத்திருப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில், வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த LinkedIn கணக்குக்கு அதிக முக்கியத்துவம் செலுத்துகின்றனர். 

LinkedIn பற்றித் தெரியாதவர்கள் இருந்தால், LinkedIn எனப்படுவது முகநூல் போன்று தொழில்துறைக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தொழித்துறை சார்ந்த சமூக வலைதளமாகும். எனினும், இங்கே நீங்கள் முகநூல் கணக்கில் பதிவிடும் விடயங்களை பதிவிட வேண்டாம். உங்கள் தொழில்துறையுடன் தொடர்புடைய தகவல்களை மட்டும் பதிவிடுங்கள். உங்களிடம் LinkedIn கணக்கு இல்லை என்றால், புதிதாக ஒன்றைத் தொடங்கிக்கொள்ளுங்கள். 

உங்கள் விண்ணப்பத்துடன் உங்கள் LinkedIn  கணக்கு முகவரியையும் இணைத்துவிடுங்கள். இது கட்டாயமில்லை என்றாலும் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் வாய்ப்பை அதிகரிக்க இது ஒரு சிறந்த வழிமுறையாகும். 

இவ்வாறு தொழில் நிமித்தம் கனடாவுக்குள் நுழைவது ஒரு சாத்தியமான விடயமா?

ஆம், நடைமுறையில் இது சாத்தியமான ஒரு விடயம். 

இவ்வாறான விடயங்கள் பற்றிக் கதைக்கும் போது பலரதும் சிந்தனைக்கும் எட்டும் ஒரு விடயம் என்னவென்றால், இவை ஒன்றும் சொல்வதைப் போல் இலகுவான விடயங்கள் அல்ல என்பது. ஆம், இந்தியா, இலங்கை போன்ற ஆசிய நாடொன்றில் இருந்து அமெரிக்கா, கனடா அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் அல்லது புலம்பெயர்ந்து செல்வதென்பது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல. ஆனால் உங்கள் வாழ்க்கையையே மாற்றி அமைத்துக்கொள்வதற்காக நீங்கள் சிரமம்பட்டு செலவழிக்கும் நேரமும், காலமும் எதிர்காலத்தில் அவ்வாறான ஒரு நாட்டில் வாழ்வதற்கான மிகப்பெரிய முதலீடாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

இதைப் பற்றிய மேலதிக தகவல்களை இணையத்தின் உதவியுடன் உங்களாலும் ஆராய்ந்து முடிவெடுக்க முடியும். 

இக்கட்டுரை உங்களுக்குப் பயனளிக்கவில்லை எனினும் இவ்வாறான ஒரு சந்தர்பத்திற்காகக் காத்திருக்கும் உங்கள்  நண்பர்கள், உறவுகள் என பலருக்கும் பயன்படலாம். ஆகவே இதை அவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Previous Post Next Post