வாழ்வில் உங்களை உயர்த்தும் 7 நற்பண்புகள்!


வாழ்வில் உங்களை உயர்த்தும் 7 நற்பண்புகள் இவை:

1. வறுமையிலும் உதவி புரியும் மனம்.

வறுமை வாழ்வில்  நீங்கள் வாடினாலும், யாரேனும் உதவி கேட்டு வந்தால், உதவி செய்யும் நிலமையில் நீங்கள் இருந்தால், கண்டிப்பாக உங்களால் முடிந்தவாறு உதவிடுங்கள்.

உதவி என்பது பணமாகவும், பொருளாகவும் மட்டும் இருக்க வேண்டியதில்லை. உங்களிடம் உள்ள அறிவாகவும் இருக்கலாம் அல்லது உங்களுக்கே தனித்துவமான திறமையாகவும் இருக்கலாம்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்  நீங்கள் செய்யும் உதவி உங்களை ஏதோ ஒரு வகையில் கட்டாயம் வந்தடையும்.


2. தோல்வியிலும் விடாமுயற்சி.

நீங்கள் வெற்றியை நோக்கி பயணிக்கும் போதெல்லாம் தோல்வி உங்களை அடித்து, உதைத்து கீழே தள்ளிவிடும். உங்களை நெருங்கியவர்களும் உங்களை உதறித் தள்ளி விடுவார்கள். வாழ்க்கை புதைகுழி போல் தோன்றும். 

தோல்வி உங்களை அடித்து, உதைத்து கீழே தள்ளும் பொழுதெல்லாம் மீண்டும் எழுந்து நின்று தோல்விக்கே சவால்விடும் மன வலிமை வேண்டும். தோல்விகளை வாழ்வில் ஒரு பாடமாக மட்டும் எடுத்து ஒவொரு முறையும் விடாமுயற்சியுடன் வெற்றிப்பாதையில் காலடி எடுத்துவையுங்கள். காலப்போக்கில் தோல்வியே உங்களை கண்டு அஞ்சிவிடும்.


3. ஏழ்மையில் நேர்மையும் ஒழுக்கமும்.

ஏழ்மை எவ்வளவு கொடுமையாக இருந்தாலும் நேர்மையும் ஒழுக்கமும் ஒருபோதும் தவறிவிடார்த்தீர்கள். நேர்மையையும் ஒழுக்கத்தையும் விற்று கிடைக்கும் செல்வம் உங்களை ஒருபோதும் நிம்மதியாக வாழவிடாது.


4. செல்வத்திலும் எளிமை.

நீங்கள் எவ்வளவு செல்வச் செழிப்புடன் பிறந்தாலும் சரி, பிறந்த பின்னர் எவ்வளவு  செல்வம் உங்களை தேடிவந்து குவிந்தாலும் சரி, ஆணவமும் கர்வமும் மட்டும் உங்களை ஆட்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஆணவமும் கர்வமும் உங்களை அடிமையாக்கும் போது மனிதநேயம் உங்களை விட்டு விலகிவிடும். வாழ்வில் சறுக்கி ஒருமுறை விழுந்தாலும் மீண்டும் எழ முடியாமல் திணறுவீர்கள்.

வாழ்வில் செல்வத்தை விட ஆத்ம திருப்தியில் கிடைக்கும் மன நிம்மதிக்கு முதலிடம் கொடுங்கள். இதைத்தான் இன்று அனைவரும் தொலைத்துவிட்டு அதிகம் தேடுகின்றனர்.


5. கோபத்தில் பொறுமை.

உங்கள் கோபம் உங்களையும் மீறி உறவுகளின் பிணைப்பை ஒரு நொடியில் உடைந்துவிடும். அளவுக்கு மீறிய கோபம் உங்கள் வாழ்வையும் சுக்குநூறாக கிழித்துவிடும். கோபதில் எந்த முடிவும் எடுக்காதீர்கள். 

உங்கள் கோபத்தை அறிந்துகொள்ளுங்கள். அதை பொறுமையுடன் கட்டுப்படுத்த முயற்சியுங்கள். கோபம் வரும்போது வாழ்வின் எதாவது இனிமையான தருணத்தை நினைவுகூருங்கள் அல்லது உங்களுக்கு பிடித்த இடத்தையோ, மனதுக்கு பிடித்த ஒருவரையோ எண்ணிப்பாருங்கள். உங்களை அறியாமலே உங்கள் கோபம் தணிந்துவிடும்.


6. துன்பத்திலும் துணிவு. 

எவ்வளவு துன்பம் வந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்கள். எவ்வளவு துன்பம் வந்தாலும் சரி, வாழ்வின் முக்கிய முடிவுகளை எடுக்க தயங்க வேண்டாம். பயத்தை தவிர்த்து துணிவுடன் உங்கள் வாழ்க்கையை தொடருங்கள்.


7. பதவியிலும் பணிவு. 

உங்கள் தொழிலில் எவ்வளவு உயரத்தை தொட்டாலும் சரி, யாரும் இலகுவில் அமர முடியாத நாட்காலிகளில் நீங்கள் அமர்ந்தாலும் சரி, எப்போதும் மற்றவர்களை மதித்து நடந்துகொள்ளுங்கள். முக்கியமாக உங்களுக்குக் கீழே வேலை செய்யும் தொழிலாளிகளை மரியாதையுடன் நடத்துங்கள். உங்களைப் போன்றே அவர்களுக்கும் தன்மானம் இருப்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். 

தொழில் செய்யும் இடத்தில் ஒருவரை மரியாதையுடன் நடத்துவதால் அல்லது உங்கள் சக தொழிலாளியை 'சார்' அல்லது 'மேடம்' என்று அழைப்பதால் நீங்கள் ஒருபோதும் தாழ்ந்துவிடுவதில்லை, உங்களிடம் இருந்து எதுவும் குறைந்தும் போகாது.

அதேபோன்று தான், யாராவது சக தொழிலாளி உங்களை  'சார்' அல்லது 'மேடம்' என்று அழைப்பது நீங்கள் செய்யும் தொழிலுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதையே தவிர உங்களை விட அவர் தாழ்ந்தவர் என்பதற்காக அல்ல.

நற்குணங்களால் வாழ்வை மெருகூட்டுவோம், வாழ்க்கையை இனிமையாக அனுபவிப்போம்.
Previous Post Next Post